தமிழகத்தை கல்வியால் உயர்த்திய பெருந்தலைவர்...கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்!
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
பெருந்தலைவர் காமராஜர், விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி தம்பதியினருக்கு 15.07.1903 அன்று மகனாகப் பிறந்தார். காமராசர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் நாளினை "கல்வி வளர்ச்சி நாளாக" 2006 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் அறிவித்தார்.
இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான டாக்டர் வரதராஜுலு நாயுடு மூலம் அறிமுகமானார். 1919ம் ஆண்டு முதல் பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார் காமராஜ். 1930ம் ஆண்டு உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்.
அதிலிருந்து தனது அரசியல் பணிகளில் ஈடுபட தொடங்கினர். 1936ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும், 1937 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராகவும், 1941 ஆம் ஆண்டு விருதுநகர் நகர்மன்றத் தலைவராகவும்,
1952 ஆம் ஆண்டு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கி மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தார். 1954 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
தன்னுடைய அயராத உழைப்பினால் 9 ஆண்டு கால ஆட்சியில் கிராமங்கள் தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கினார். ஏழை மாணவர்கள் கல்வி பயில இலவச மதிய உணவுத் திட்டத்தினைக் கொண்டு வந்தார்.
விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் வளர்ச்சியடையச் செய்வதற்கு பெரும் பங்காற்றினார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் கட்டி விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.
1964 ஆம் ஆண்டு மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற காமராசர், நேருவின் மறைவிற்குப் பிறகு இந்தியாவின் பிரதமரை இரண்டு முறை தேர்ந்தெடுப்பதில் 'கிங் மேக்கராக’ விளங்கினார்.
காமராசரின் மறைவுக்குப் பிறகு 1976 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிலையில், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில், காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து, கல்வி வளர்ச்சி நாளில் தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.