காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தலைவர்கள்!
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119 பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மனோகர் மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தினர்.
காமராசரின் 119வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வி௫துநகரில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் ராமசுப்பிரமணியன், மக்கள் செய்தி தொடர்பு துறை அதிகாரி வெற்றிச்செல்வன் ஆகியோரும் காமராஜர் அவர்கள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் குத்து விளக்கு ஏற்றி மரியாதை செலுத்தினார்.
மேலும், விருதுநகரில் உள்ள காமராஜர் நூற்றாண்டு மணி மண்டபத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர் காமராஜரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.