"காமராஜர் எனது தந்தை, எம்ஜிஆர் எனது சொத்து" - கமல் பேச்சு
திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் முருகானந்தம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திருச்சியில் நேற்று கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கமல்ஹாசன் பேசியதாவது, “காமராஜர் எனது தந்தை, எம்.ஜி.ஆர் எனது சொத்து. அரசியல் எங்களுக்கு தொழில் அல்ல.
நான் வரும் வழியில் “ஜெயிச்சாசு” “ஜெயிச்சாசு” என்ற குரல் கேட்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றினால் தான் வெற்றி. நான் 234 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறேன். எந்த ஊருக்கு சென்றாலும், திறந்து கிடக்கிற சாக்கடை, போக்குவரத்து நெரிசல் இருக்கத்தான் செய்கிறது. இங்கு அரியமங்கலம் பகுதியில் உள்ள குப்பைமேட்டால் உங்களுக்கு என்ன பெருமை இருக்க போகிறது.
குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். எங்கள் வேட்பாளர்களுக்கு அரசியல் பயிற்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் மக்கள் சேவையில் அனுபவம் இருக்கிறது. தமிழகத்தை ஆளுகிற இரு கட்சிகளுக்கும் ஊழலை தவிர வேறெதுவும் தெரியாது. எடப்பாடி பழனிசாமியை பார்த்து அவர் ரூ.10 லட்சம் கோடி சுருட்டிவிட்டார் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
ஆனால் அவரோ, ஸ்டாலினை பார்த்து, இவர் ரூ.20 லட்சம் கோடி சுருட்டிவிட்டார் என்று சொல்கிறார். அது இல்லை என்று இருவருமே சொல்லவில்லை. இப்போது நாம் கணக்கு போடுவது என்னவென்றால், நம்முடைய பணம் ரூ.30 லட்சம் கோடியை இவர்கள் இருவரும் அடித்துவிட்டார்கள். ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி அவர்களே வேட்டு வைத்து கொள்கின்றனர்.

நான் பிரசாரத்துக்கு சென்ற வாகனத்தை சோதனையிட்டார்கள். என் வாகனத்தில் சோதனை செய்தால் நேர்மையும், வியர்வையும் தான் கிடைக்கும். அதை தவிர வேறெதுவும் அவர்களக்கு கிடைக்காது.
எங்கள் ஆட்சியின் கல்வி திட்டத்தின்படி மாணவ - மாணவிகள் படிக்கும்போது, தற்கொலைகள் நிகழாது. இதை செயல்படுத்த அறிவார்ந்த கூட்டத்தை தேடி பிடித்திருக்கிறேன். வருகிற ஏப்ரல் 6-ந் தேதியை சரித்திரம் திரும்பும் நாளாக மாற்றுங்கள்.