பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் வெளியேற என்ன காரணம்? - சர்ச்சையை கிளப்பும் வனிதா
நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறியது குறித்து நடிகை வனிதா விஜயகுமார் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைந்ததை தொடர்ந்து ஓடிடி தளத்திற்காக பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி 24 மணி நேரமும் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வாரூணி ஆகியோர் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட நிலையில் கடந்த வாரம் நிகழ்ந்த டபுள் எவிக்ஷன் முறையில் ஷாரிக், அபிநய் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் படப்பிடிப்பு இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டதால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நடிகை வனிதா விஜயகுமார் வீட்டை விட்டு அனுப்பும்படி பிக்பாஸிடம் கதறி அழுத நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். நடிகர் சிம்பு தற்போது பிக் பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பேட்டி கொடுப்பது வழக்கம்.
அந்த வகையில் வனிதா தனது பேட்டியில் கமல் திரைப்பட ஷூட்டிங் இருக்கிறது என்ற காரணத்தால் வெளியேறவில்லை. சொல்லப்போனால் விக்ரம் திரைப்படத்தின் தயாரிப்பாளரே கமல்ஹாசன் தான். எனவே அவரால் நான்கைந்து நாட்கள் பிக்பாஸ் அல்டிமேட்டுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகக் கூடிய நெருக்கடி இல்லை என்பதால் ஏன் விலக வேண்டும் என்ற கேள்வியை அவர் முன்வைத்துள்ளார்.
மேலும் நிகழ்ச்சி செல்லும் போக்கு தவறாக இருக்கிறது என்பதால் அதை கமல் விரும்பவில்லை. அதன் காரணமாக வெளியேறி இருக்கலாம் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி நிகழ்ச்சி தவறாக செல்வதாக தானும் உணர்ந்ததாகவும் வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.