சாதியே என்னுடைய முதல் எதிரி - கமலஹாசன் பேச்சு
திருமாவளவனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கமலஹாசன் பேசியுள்ளார்.
திருமாவளவன் பிறந்தநாள் விழா
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 64 வது பிறந்தநாள் விழா நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
இதில், அமைச்சர் சேகர் பாபு, மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், தங்க முலாம் பூசப்பட்ட ஒரு கிலோ வெள்ளி செயினை, திருமாவளவனுக்கு கமலஹாசன் பரிசாக வழங்கினார்.
கமலஹாசன் பேச்சு
அதைத்தொடர்ந்து அந்த நிகழ்வில் பேசிய கமலஹாசன், "ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் மயப்படுத்துவது சாதாரண விஷயம் இல்லை. அப்படி செய்பவர்கள் ஆச்சரியமானவர்கள். திருமாவளவனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அரசியலா ஆதாயமா என கேட்டால், திருமா அரசியலையே தேர்வு செய்வார்.
நான் கலைஞன் எனக்கு சாதி இல்லை. நான் யார் என்ன வண்ணம் என்பதெல்லாம் முக்கியம் இல்லை. ஒருவரை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களை சாடுவது நம் கடமை.
இந்தியாவின் பலவீனமே சாதிதான். சாதிய தடைகள் நீக்கப்பட்ட பின்னர் தான் நாம் ஒரே தேசமாக ஒரே மக்களாக இணைய முடியும்.
கட்சி ஆரம்பித்த போது முதல் எதிரியை தேர்ந்தெடுத்து விட்டீர்களா என கேட்டார்கள். என்னுடைய சாதியை சொல்லி என்னை கிண்டல் செய்வார்கள். சாதி தான் என்னுடைய முதல் எதிரி. பிறப்பினால் நான் யாருக்கும் தாழ்ந்தவன் இல்லை. என்னை விட உயர்ந்தவர் யாரும் இல்லை என பேசினார்.