அரசியலில் கமல் இன்னும் கத்துக்குட்டித்தான் - வானதி சீனிவாசன் பேட்டி
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கோவையில் தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இவர், கோவை காந்திபுரம் 100 அடி சாலை பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தை பெருமைப்படுத்தும் வகையில் பாபா சாகிப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பாரதிய ஜனதா கட்சி மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகின்ற கமல்ஹாசன் நேற்று, திருக்குறளை உதாரணம் காட்டி எனது கேள்விக்கு பதில் அளித்துள்ளார். கமல்ஹாசன் சினிமா போலவே அரசியலையும் பார்க்க வேண்டும்.
அரசியல் என்பது, சக மனிதர்களிடம் அன்பும், அமைதியையும் ஏற்படுத்தும் தளம். சமீபத்தில் மைக் சரியாக வேலை செய்யவில்லை என்பதற்காக மக்கள் நீதி மய்யத்தின் ஊழியரை அடித்துள்ளார். இந்த செயலை பார்க்கும் பொழுது, அரசியலில் அவர் இன்னும் கத்துக்குட்டி என்பதை காட்டுகிறது. சிறிய ஏமாற்றத்தை கூட தாங்கிகொள்ள முடியாத நிலையில் உள்ளார் கமல்ஹாசன்.
அவரின் படம் வெளிவராத போது இந்திய நாட்டை விட்டே வெளியே செல்கிறேன் என்றார். அரசியலில் இன்னும் அவர் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. தொண்டாமுத்தூரில் பணம் பட்டுவாடா நடைபெறுகிறது. இதனை தேர்தல் அதிகாரி கண்டு கொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா கட்சி கேட்டு கொள்வது, ஒன்றே ஒன்றுதான். தமிழகத்தில் பாரபட்சமின்றி, தேர்தல் நடைபெற வேண்டும்.

கோவையில் நேற்று நடைபெற்ற பாஜகவின் ஊர்வலத்தின் போழுது கலவரத்தை தூண்டும் வகையில் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி, கடந்த ஆறு ஆண்டு காலமாக மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. ஆனால் இந்தியாவில் எத்தனை மாநிலத்தில் மதகலவரம், ஜாதி கலவரம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி செய்கின்ற அரசின் காரணமாக எங்கேயும் மதக்கலவரங்கள் நடைபெறவில்லை.
இஸ்லாமியர்கள் எழுப்பிய குரலுக்கு பதில் குரல் மட்டுமே கொடுக்கப்பட்டது. இதில் கலவரம் எதும் நடைபெறவில்லை. சிறுபான்மை இன மக்களை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இப்படி தூண்டி விடுகிறது. திமுக ஆட்சி காலத்தில் தான் கோவையில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. அதனை முதலில் ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றார்.