கமல் எங்கே போட்டியிடப்போகிறார்? நாளை முதல்கட்ட பட்டியலை வெளியடுகிறது மநீம
நடிகர் கமல்ஹாசன் எந்த தொகுதியில் போட்டியிடப்போகிறார் என்பது நாளை தெரிந்துவிடும் எனக் கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது கமல்ஹாசன் தான் முதல்வர் வேட்பாளர் என்பதை சரத்குமார் உறுதிபடுத்தினார். அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ள தேமுதிக உடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியானது.
இதற்குப் பதிலளித்த கமல், “கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகு தெரிவிக்கிறேன். நல்லவர்கள் யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம். நாங்கள் தான் முதல் கூட்டணி. எங்கள் கூட்டணியின் முதல் கட்ட வேட்பாளர் நாளை வெளியிடப்படும்” என்று தெரிவித்தார். ஸ்டாலினை மட்டுமே விமர்ச்சிக்கீறர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “அனைவரையும் தான் விமர்சிக்கிறேன். அடிக்கின்ற ஆட்கள் அனைவருமே எதிரிகள் தான்” என்றார்.
கமல்ஹாசன் ஆலந்தூர் மற்றும் கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடலாம் எனச் சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் கமல் போட்டியிடும் தொகுதி தெரியவரலாம். மேலும் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் போட்டியிடும் தொகுதியும் நாளை தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.