தனி ஒருவனாய் வேகமெடுக்கும் கமல்! பாராட்டும் ரஜினி
2021 தமிழக சட்டமன்ற தேர்தலை கழகங்கள் வாழ்வா சாவா போராட்டமாகக் கருதி கூட்டணிக் கணக்குகள், பிரச்சார வியூகங்கள், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் என தமிழகத்தை பரபரப்பாக்கிக் கொண்டிருக்கின்றன. வலுவான கூட்டணியில் இருமுனைப் போட்டிதான் இருக்கும் என எதிர்பார்த்திருந்த ஸ்டாலினுக்கும், ஈபிஎஸ்ஸூக்கும் வில்லனாக வந்தார் கமல்.
நாடாளுமன்ற தேர்தலில் மநீம வாங்கிய வாக்குகளும், பிரச்சாரத்திற்குச் சென்ற இடமெல்லாம் கமலுக்குக் கூடிய கூட்டமும் இந்தத் தேர்தலில் கருப்புக் குதிரை அவர்தான் என்பதை உணர்த்தியது. அடுத்தடுத்து வந்த கள நிலவரப் புள்ளி விபரங்களும் அதை உறுதி செய்தன. அவரைத் தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட காங்கிரஸ் வெளிப்படையாகவும், திமுக மறைமுகமாகவும் முயற்சித்து வந்தன. கூட்டணி அமைப்பீர்களா எனும் கேள்வியை எதிர்கொள்ளும்போதெல்லாம் நல்லவர்களுடன் கூட்டணி என்றே பதில் சொல்லி வந்தார் கமல்ஹாசன்.
உடல்நிலை காரணமாக ரஜினி தன் அரசியல் வருகை அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டபோது ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பீர்களா என பத்திரிகையாளர்கள் கமலிடம் கேட்டார்கள் ‘எல்லாரிடமும் கேட்கும்போது என் நண்பனிடம் கேட்காமல் இருப்பேனா?’ என்று பதில் சொன்னார். முதற்கட்ட தீவிர பிரச்சாரத்தில் இருந்தபோது ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது உடல்நிலை குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோது ‘ஊர் திரும்பியதும் அவரை அவசியம் சென்று சந்தித்து நலம் விசாரிப்பேன்’ என்றார் கமல். ஆனால், பிரச்சாரத்தின் போதே கமலின் காலில் முன்னர் செய்த சர்ஜரியில் காயம் ஏற்பட்டது. பிரச்சாரம் முடித்து வந்ததும் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். சந்திப்பு தள்ளிப்போனது. இந்நிலையில் இன்று போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் கமல் ரஜினி சந்திப்பு நிகழ்ந்தது.
மிக மிக ரகசியமாக நிகழ்ந்த இந்தச் சந்திப்பில் இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். பேச்சு பெரும்பாலும் சினிமாவைப் பற்றியே இருந்திருக்கிறது. இருவரும் நடித்து வரும் திரைப்படங்கள் குறித்தும், சமகால சினிமாவின் போக்குகள் குறித்தும் விரிவாகப் பேசியிருக்கிறார்கள்.
பிறகு குடும்ப விஷயங்களைப் பற்றி பேசி இருக்கிறார்கள். இறுதியாக பேச்சு அரசியல் பற்றி திரும்பியிருக்கிறது. அதில் தமிழக அரசியல் நிலவரம், யாருடன் கமல் சேர வேண்டும், யாருடன் சேரவே கூடாது போன்ற விஷயங்களைப் பற்றி ரஜினி மிகுந்த ஆர்வமாகப் பேசியதாகச் சொல்கிறார்கள்.
சமரசங்கள் செய்துகொள்ளாமல், யார் பதிலுக்கும் காத்திராமல் கமல் தனி ஒருவராய் வேகமெடுத்திருப்பதை ரஜினி வெகுவாகப் பாராட்டியதாகவும் சொல்கிறார்கள்.
நல்லவர்களுடன் கூட்டணி என்று சொல்லி வந்தவர், யார் அந்த நல்லவர்கள் என்று தமிழகத்திற்குக் காட்டத் துவங்கி விட்டார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.