கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் கமல்! அடுத்த இடத்தில் யார்?

election kamal millionaire candidate
By Jon Mar 22, 2021 02:19 PM GMT
Report

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்களில் மூன்றாவது இடத்தில் கமல் இடம் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் திமுக வேட்பாளரும், முதலிடத்தில் அதிமுக வேட்பாளரும் இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும். இதில் அவர்கள் மீதுள்ள வழக்குகள், அவர்கள் சொத்து மதிப்பு உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள். பெரும் கோடீஸ்வரர், விதவிதமான சொகுசு காரில் வருவார், மிக ஆடம்பரமாக இருப்பார். ஆனால், அவரது சொத்து மதிப்பு சில கோடிகள் அசையா சொத்துகளும், சில கோடிகள் அசையும் சொத்துகளும் இருப்பதாக வரும்.

பல கோடிக்குச் சொந்தக்காரர், பல நூறு கோடியில் புரள்பவர் என்று பேச்சு அரசல் புரசலாக இருக்கும். ஆனால், வேட்பு மனுவின்போது அவரது சொத்து மதிப்பு ரூ.1 கோடி, ரூ.2 கோடி என இருக்கும். இது முழுக்க உண்மையில்லை என்றே சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் சொத்து மதிப்பை அறிந்துகொள்வதில் வாக்காளர்கள் ஆர்வம் காட்டத் தவறுவதில்லை.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிக சொத்து மதிப்பைக் காட்டிய வேட்பாளர் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் மறைந்த வசந்தகுமார்தான். வசந்த்&கோ அதிபரான அவர் ரூ.337 கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருப்பதாகக் காண்பித்தார். அடுத்து அண்ணா நகர் திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் ரூ.170 கோடியும், தமிழக முதல்வராக இருந்து போட்டியிட்ட மறைந்த ஜெயலலிதா ரூ.113 கோடியும் சொத்துக் கணக்காகக் காட்டியிருந்தனர்.

இம்முறை அதிக சொத்து மதிப்பு காட்டிய 2 முக்கிய வேட்பாளர்களும் உயிருடன் இல்லை. தற்போது நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக சொத்து மதிப்பு காட்டியுள்ளவர், சில மாதங்களே ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்து பின் நீக்கப்பட்ட, அம்பாசமுத்திரம் தொகுதியில் தற்போது அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இசக்கி சுப்பையா முதலிடத்தில் வருகிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.246.73 கோடி ரூபாயாக உள்ளது.

கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் கமல்! அடுத்த இடத்தில் யார்? | Kamal Place List Millionaire Candidates Next

அடுத்த இடத்தில் கடந்த முறை இரண்டாம் இடத்தில் இருந்த அதே அண்ணா நகர் திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் உள்ளார். கடந்த முறை ரூ.170 கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு தற்போது ரூ.211 கோடியாக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்து 3-வது இடத்தில் முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் மநீம நிரந்தரத் தலைவர், கோவை தெற்கில் போட்டியிடும் கமல்ஹாசன் வருகிறார்.

அவரது சொத்து மதிப்பு ரூ.176 கோடி ரூபாய் எனக் காட்டியுள்ளார். அவருக்கு அடுத்து நான்காவது இடத்திலும் மநீம வேட்பாளர் மகேந்திரனே வருகிறார். சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அவர் ரூ.161 கோடி சொத்து மதிப்பில் உள்ளார்.