கமல்ஹாசன் ஸ்டாலினை தான் எதிர்க்க வேண்டும்: வானதி சீனிவாசன் பேச்சு
ஊழலுக்கு எதிராக களமிறங்கியதாக கூறும் கமல்ஹாசன், ஸ்டாலினை எதிர்த்து தான் போட்டியிட வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன் தினந்தோறும் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று கோவை வக்கீல்களுடன் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அப்போது அங்கு வானதி சீனிவாசன் பேசும்பொழுது ஒரு பெண் வேட்பாளராக உங்கள் முன்பு நான் நிற்கிறேன். அதுவும் வழக்கறிஞராக இருந்து உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், அரசியலுக்கு வந்ததால் வக்கீல் தொழிலைத் தான் மிஸ் பண்ணுகிறேன். 2016 தேர்தலில் போட்டியிட நான் வந்த பொழுதிலிருந்து இதுவரை நான் வழக்குகள் எதற்கும் செல்வதில்லை. அரசியல் என்பது வாழ்க்கையில் ஒரு லட்சியமாக எடுத்து நான் பயணம் செய்ய முடிவு எடுத்துள்ளேன்.
அரசியல் பணி தான் என்று முடிவெடுத்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளாக நெசவாளர்களுக்கு பெண்களுக்கு ,பெண் குழந்தைகளுக்கு , தந்தை இல்லாத குழந்தைகள் பெண் குழந்தைகளுக்கு என ஏராளமான உதவிகளை நான் செய்து வருகிறேன். 5 லட்ச ரூபாய் காப்பீடு திட்டத்தில் 20 ஆயிரம் பேரை இணைத்துள்ளேன். சமீபத்தில் கண் மருத்துவ முகாம் நடத்தி சுமார் 2000 பேருக்கு கண் கண்ணாடிகளை அவர்களது வீடு தேடி சென்று வழங்கியிருக்கிறேன். மத்திய அரசிடம் இருந்து நிறைய திட்டங்களைப் பெற்றுத் தர வேண்டும்.
மற்ற பெருநகரங்களை போல மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வர வேண்டும். நொய்யல் நதி சீரமைக்கப்பட வேண்டும். கோவை நகரை சுற்றி உள்ள குளங்கள் தூர்வார வேண்டும். மத்திய அரசிடம் பேசி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் . கடந்த முறை காங்கிரஸ் சார்பில் நின்ற மயூரா ஜெயக்குமார் மீண்டும் இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் .

கடந்த 5 ஆண்டு காலத்தில் அவர் இந்த தொகுதிக்கு என்ன செய்திருக்கிறார். மற்றொரு புறம் கமலஹாசன் நிற்கிறார். அவர் பி.ஜே.பி யை தோற்கடிக்க வேண்டும் என்று நோக்கத்தோடு இருப்பதாக கூறுகிறார். ஏன் பிஜெபியை தோற்கடிக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக நிற்கிறேன் என்று கூறுகிறார்.
ஊழலுக்கு எதிராக நிற்க வேண்டுமென்றால் அவர் ஸ்டாலினுக்கு எதிராக தான் நிற்க வேண்டும் . ஊழலுக்கு எதிராக நிற்பதாக கூறும் கமல் எனக்கு எதிராக ஏன் நிற்க வேண்டும் அதுதான் எனக்கு புரியவில்லை. கடந்த தேர்தலில் எனது சொத்து மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருந்தது என்றும் தற்போது அது உயர்ந்து இருக்கிறது என்றும் ஒரு சிலர் கூறி வருகிறார்கள்.
எனது குடும்ப சொத்துகள் பாகப் பிரிவினை மூலம் எனக்கு வந்து சேர்ந்தது. இது கூட புரியாமல் பலர் பேசி வருகிறார்கள். கமல் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் யாருக்கு என்ன செய்திருக்கிறார் என்ன என்று கூறத் தயாரா? யார் சட்டமன்ற உறுப்பினர் ஆக மாறினால் இந்த ஊருக்கு நல்லது உங்களுக்கு நல்லது என்பதை யோசித்துப் பாருங்கள்.
கடந்த 30 ஆண்டுகளாக எனது பொது வாழ்க்கை பயணத்தை பார்த்தால் அது உங்களுக்கே புரியும். அனைவரையும் வாக்களிக்க சொல்லுங்கள் சொல்லுங்கள் என்று வானதி சீனிவாசன் பேசினார்.