கமலை பற்றி என்னிடம் எதுவும் பேசாதீங்க- அது மார்க்கெட்டிங் தந்திரம்: கவுதமி ஆவேசம்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் மார்க்கெட்டிங் தந்திரத்தை பின்பற்றுகிறது என்று பாஜக நிர்வாகி கவுதமி குற்றம் சாட்டியிருக்கிறார். நடிகை கவுதமியும், நடிகர் கமல்ஹாசனும் திருமணமாகாமல் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமலை விட்டு கவுதமி விட்டு பிரிந்தார்.
இதனையடுத்து அரசியலில் களமிறங்கிய கவுதமி, பாஜகவில் இணைந்தார். தற்போது கமலும் மக்கள் நீதி மய்யம் கட்சி மூலம் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்கிறார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கவுதமி பேசுகையில், கமல்ஹாசனை விட்டு பிரிந்து பல வருடங்கள் ஆகிறது. அது நடந்து முடிந்த கதை.
இனி அதைப் பற்றி என்னிடம் பேச வேண்டாம். பாஜக தலைவர்கள் மோடி, வாஜ்பாய் உள்ளிட்டவர்கள் மீது நான் அளவு கடந்த மரியாதை வைத்துள்ளேன். அதனால் கடந்த 23 ஆண்டுகளாக அக்கட்சியின் மீது எனக்கு ஆர்வம் உள்ளது. அதனால்தான் நான் பாஜகவில் இணைந்தேன்.

மக்கள் நீதி மய்யம் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று கூறுகிறார்கள். அவர்கள் கொண்டுவரும் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா? என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அது வரும் மே 2ம் தேதி தெரிந்து விடும். புதிய கட்சி ஆரம்பிக்கும் எல்லோருமே இதுபோல மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று தான் கூறுவார்கள். அந்த வகையில் கமல்ஹாசனும் இதுபோன்ற மார்க்கெட்டிங் தந்திரத்தை பின்பற்றுகிறார்.
மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவதால் திமுக வாக்குகள் உடையுமா? என்பது எனக்கு தெரியாது. அப்படி பிரிந்தால் அது பாஜக அதிமுக கூட்டணிக்குதான் சாதகமாக இருக்கும்” என்று பேசினார்.