கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கும் கமல்ஹாசன் : வெளியான முக்கியத்தகவல்
கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்குமாறு ராகுல்காந்தி, கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் .
ஆலோசனை கூட்டம்
சென்னையில் மக்கள் நீதி மய்ய கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமை வகித்தார். இதில் வரும் 2024 பாராளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் பல்வேறு விஷயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், வரும் மே மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற பொதுத்தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார்.
பிரச்சாரத்தில் கமல்ஹாசன்
மேலும், நாடாளுமன்ற தேர்தல் காலம் நெருங்கி விட்டதால், நேரம் குறைவாக இருப்பதாகவும், உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும் எனவும், பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட வேலைகளை விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்பதை பற்றியும் குறிப்பிட்டு கமல்ஹாசன் பேசினார்.
இந்நிலையில், ஏற்கனவே, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஈரோடு இடைத்தேர்தலில் இவிகேஎஸ்.இளங்கோவனுக்காக பிரச்சாரம் செய்தது போல, ராகுல்காந்தி அழைப்பை ஏற்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் மே முதல் வாரத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.