நீங்கள் எல்லோரும் எம்.ஜி.ஆராக மாறி கணக்கு கேட்கலாம் - கமல் பேச்சு
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணாநகரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசுசியதாவது - “மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சம்பாதிக்கும் எண்ணத்தில் அரசியலுக்கு வருவது இல்லை.
50 ஆண்டு காலமாக சிதைந்து கிடக்கும் தமிழகத்தைச் சீரமைக்க வேண்டியது உங்கள் கடமையாகும். அதற்கு நாங்கள் கடமையாற்ற அனுமதி அளிக்க வேண்டும். வருகிற ஏப்ரல் 6ம் தேதி அதற்கான விதையை தூவுங்கள். எங்கள் ஆட்சியில் வரவு, செலவு கணக்குகளை முறையாக, வெளிப்படையாக காட்டி விடுவோம். அதனை நீங்கள் அனைவரும் ஆன்லைனில் பார்த்துக் கொள்ளலாம்.

கணக்கு கேட்பதற்கு இன்னொரு எம்ஜிஆர் வர வேண்டியது அவசியம் கிடையாது. கருணாநிதியிடம் கணக்கு கேட்ட பிரச்சினைக்குப் பின்பு தான் அதிமுகவை எம்ஜிஆர் ஏற்படுத்தினார்.
அதுபோல் நீங்கள் ஒவ்வொருவரும் புரட்சித் தலைவராக மாறி யாரை வேண்டுமானாலும் கணக்கு கேட்கலாம். எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தேவையான அளவுக்கு ஊதியத்தை எடுத்துக்கொண்டு மீதியை உங்களுக்கே கொடுத்து விடுவார்கள்” என்றார்.