சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட் - கமல்ஹாசன்

Tweet Kamal Haasan Makkal Needhi Maiam
By Thahir Sep 22, 2021 05:30 AM GMT
Report

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான குரல்கள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், நீட் தேர்வு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், 'நீட் ஓர் உயிர்க்கொல்லித் தேர்வு என்பதை உரக்கச் சொல்கிறது நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை! நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை,

சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட் - கமல்ஹாசன் | Kamal Haasan Makkal Needhi Maiam

இந்தத் தேர்வின் தீவிளைவுகளைப் பட்டியலிடுகிறது. அதன்படி, கிராமப்புற ஏழை மாணவர்கள், தமிழ் வழியில் பயின்றோர் மருத்துவராகும் கனவை இத்தேர்வு சிதைக்கிறது.

நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 14.44 சதவீதத்திலிருந்து வெறும் 1.7 சதவீதமாகச் சரிந்துள்ளது.

இது சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரான தேர்வு என்பதற்கு இந்த ஒரு புள்ளிவிவரமே போதுமானது. நீட் தேர்வுக்குப் பிறகு எம்.பி.பி.எஸ் படிப்பில் சி.பி.எஸ்.இ மற்றும் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள்தான் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

நீட் தேர்வில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களில் 90% தனியார் கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெற்றவர்கள். நீட் தேர்வின் பின்னால் இருப்பது வணிக நோக்கம்தான் என்பது, நான் ஆரம்பம் முதலே சொல்லிவரும் ஒன்று.

இந்தப் புள்ளிவிவரங்கள் அதை உறுதி செய்கின்றன. நாட்டிலேயே சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக்கொண்டிருப்பது தமிழகம்.

இந்தத் தேர்வு நீடிக்குமானால் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு சிதையும். நீட் தேர்வு அறிமுகமான பிறகு, தமிழ் வழியில் மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது.

உலகம் முழுக்க தாய்மொழிக் கல்வி ஊக்குவிக்கப்பட்டு வரும் சூழலில், நீட் தேர்வு தாய்மொழிக் கல்விக்கு எதிரான மனோநிலையை வளர்க்கிறது.

நகர்ப்புறத்தில் பிறந்த பண வசதி படைத்தவர்கள் மட்டுமே மருத்துவராகும் வாய்ப்பினை உருவாக்கும் இந்த அறமற்ற உயிர்க்கொல்லித் தேர்வினை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியாவிலிருந்தே விரட்டியடிக்க வேண்டும்.

உண்மைகளை வெளிக்கொணர்ந்து சட்டப் போராட்டத்திற்கான வழிவகைகளையும் ஆராய்ந்து சொன்ன ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினருக்கு மக்கள் நீதி மய்யம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

இக்குழுவின் பரிந்துரைகளின்படி விரைவில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்.' என பதிவிட்டுள்ளார்.