மருத்துவமனையில் இருந்து நடிகர் கமல் டிஸ்சார்ஜ்

கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கொரோனா பரவல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் தீவிரமாக பரவியது. அதைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு விதிக்கப்பட்டும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. ஆனால், குறைந்தது. பின்னர் இதற்கு தடுப்பூசி தயாரிக்கப்பட்டது.

கொரோனா 2 வது அலை நாடு முழுவதும் பரவிய நிலையில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தொற்று குறைந்து வருகிறது.

தடுப்பூசி போடும் பணியும் தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் பிரபலங்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி நவம்பர் 22 ஆம் தேதி ட்விட்டரில் பதிவிட்ட அவர், 'அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது.

பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்' என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அவர் விரைவில் நலம் பெற வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கமல் நலம்பெற வேண்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.  

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்