"அரசியலே வேண்டாம்..ஆசானே போதும்"...கமல் ரசிகர்கள் அடித்த போஸ்டரால் பரபரப்பு
மதுரையில் கமல் ஹாசன் குறித்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் 2021 கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 170 தொகுதிகளில் போட்டியிட்டு இருவர் மட்டுமே டெப்பாசிட் பெற்றுள்ளனர். அதில் ஒருவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி, மற்றொருவர் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரான மகேந்திரன் சிங்காநல்லூரில் பெற்றார். மற்ற அனைத்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களும் டெபாசிட் இழந்து தோற்றார்கள்.
மக்கள் நீதி மய்யத்தின் ஓட்டு சதவீதம் 2.75 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று தனது கட்சியின் முக்கியத் தலைவர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டார் கமல்ஹாசன். அப்போது ஆலோசனை முடிந்து வெளியே வந்த முக்கியத் தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ் உட்பட முக்கியத் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தனர்.
இந்நிலையில் மதுரையில் அவரது ரசிகர்களிடையே "அரசியல் வேண்டாம்... எனக்கு ஆசானே போதும்" "மாறாதையா மாறாது மக்கள் மனமும் குணமும் மாறாது" ''மாற்ற நினைத்தவர்கள் இங்கு தோற்றுப் போனதே சரித்திரம். ஐந்தில் வளையாதது தமிழகம் ஐம்பதில் வளையுமா?'' போன்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர். கமலுக்கே அறிவுரை கூறுவது போல் உள்ள இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
