கர்நாடகாவில் கட்சி தொடங்குகிறாரா கமல்ஹாசன்? - தீவிர ஆலோசனை
கர்நாடகாவிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்க அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தது. இதனால் அக்கட்சியில் இருந்து பல முன்னணி நிர்வாகிகள் விலகினர்.
இதனிடையே உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வரும் வகையில் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அவர் நிர்வகித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களாக நிர்வாகிகளை சந்தித்து வரும் கமல்ஹாசனிடம் சிலர், கர்நாடகாவிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து கட்சியின் மாநில துணைத் தலைவர் மவுரியா, “விரைவில் கர்நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் உருவாகும்” என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகம் தவிர்த்து புதுச்சேரியிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.