ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை: டாஸ்மாக் திறப்பு குறித்து கமல் கடும் தாக்கு
குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம் என டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து விமர்சித்துள்ளார்.
கொரோனா தொற்று குறைந்து வரும் காரணத்தால் தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இதற்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக்கொள்ளவேண்டும்” என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.