திமுக வரலாற்றில் முத்திரை பதித்த கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர்
கோவையில் முதல் திமுக மேயர் அதிலும் முதல் பெண் மேயர் என்ற பெருமையுடன் இன்று கோவை மாநகராட்சி மேயராக பதவி ஏற்றுள்ளார் கல்பனா.
தமிழகத்தில் கோவை மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பிறகு 1996-ல் நடந்த கோவை மாநகராட்சி தேர்தலில் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற வி.ஜி கோவையின் முதல் மேயராக தேர்வானார்.
அப்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மூப்பனாருக்காக கோவை மாநகராட்சி மேயர் பதவியை கூட்டணிக் கட்சிக்கு கொடுத்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.
2001-ம் ஆண்டு நடைபெற்ற கோவை மாநகராட்சி தேர்தலில் அதிமுக பெரும்பான்மையாய் வெற்றி பெற்றது. பூக்கடை நடத்தி வந்து வார்டு உறுப்பினராய் போட்டி போட்டு வெற்றியடைந்த மலரவன் அதிமுக சார்பாக இரண்டாவது மேயராக வந்தார்.
2006-ல் நடந்த மாநகராட்சி தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக வார்டுகளில் வெற்றிபெற்றதால் அப்போது திமுகவுக்கு கோவை மேயர் பதவியை கைப்பற்றும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் மீண்டும் கூட்டணிக்காக திமுக அந்த வாய்ப்பை காங்கிரஸைச் சேர்ந்த காலனி வெங்கடாச்சலத்திற்கு கொடுத்து மூன்றாவது மேயர் ஆக்கியது.
அதன்பின் 2011-ம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமியை கோவை மாநகராட்சியின் 4-வது மேயராக்கினார் ஜெயலலிதா.
பிறகு அவரை கட்சியினரின் புகாரின் அடிப்படையில் மூன்றாண்டுகளில் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார்.
உடனடியாக அந்த அதிமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார் என்பவரை கோவை மாநகராட்சியின் 5-வது மேயராக்கினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
இதற்கு பிறகு 2016-ம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 6 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் நடந்து முடிந்துள்ளது.
கோவை மாநகராட்சி மேயர் பதவியைக் கைப்பற்ற் இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தும் அதனைக் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுத்த திமுக தலைமை.
ஆனால், இந்தமுறை அதுபோல் செய்துவிடக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்து வந்தது.
அதன்படியே கோவை மேயராக கல்பனா தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.. கவுன்சிலராக வெற்றி பெற்ற பின்னர் கல்பனா கோவையில் இருந்து பேருந்தில் பயணம் செய்து தமிழக முதல்வரை சந்தித்து வந்துள்ளார்.
இவர் மிகவும் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக எளிய ஒரு பூக்கடைக்காரரை மேயராக்கியது போல், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள கல்பனாவிற்கு மேயர் பதவியை வழங்கியுள்ளது.
இதன்மூலம் கோவையின் முதல் பெண் மேயராகவும், திமுகவின் முதல் கோவை மேயராகவும் வரலாறு படைத்துள்ளார்.