கள்ளழகர் ஏன் வைகை ஆற்றில் இறங்குகிறார் தெரியுமா? வாங்க தெரிந்து கொள்வோம்..!

madurai கள்ளழகர் சித்திரைதிருவிழா வைகை kallalagar-alagar chithirai-festival
By Nandhini Apr 14, 2022 04:31 AM GMT
Report

மதுரையில் மக்களுக்கு மிகவும் பிரசித்திப்பெற்ற விழா என்றால் அது சித்திரை திருவிழா தான். மதுரை மாவட்டத்தை சுற்றி லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வைகை ஆற்றில் ஒன்று திரண்டி கோலாகலமாக சித்திரை திருவிழாவை கொண்டாடி மகிழ்வார்கள். அந்த விழாவில் ஒன்று தான் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி.

ஏன் கள்ளழகர் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்குகிறார் என்று தெரியுமா? அதற்கு புராணக்கதைகள் உள்ளது.

மதுரையில் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. அப்போது, திருமாலின் அவதாரமாக விளங்கும் சுந்தரராஜப்பெருமாள் தன் தங்கை மீனாட்சியின் திருமணத்தை காண்பதற்காக சீதனத்தோடு அழகர் மலையிலிருந்து கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு வருகிறார். ஆனால், அவர் வருவதற்குள் திருமணம் முடிந்து விடுகிறது.

இத்தகவல் கள்ளழகர் வைகை ஆற்றின் வடகரைக்கு வரும்போது அவருக்கு தெரியவருகிறது. இதனால் கோபமடைந்த கள்ளழகர் மதுரை மாநகருக்கு வராமல் வண்டியூர் வழியாக மீண்டும் அழகர் மலைக்கே திரும்பிச் சென்று விடுகிறார். இது ஒரு கதை.. ஆனால், கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு இன்னொரு கதையும் உள்ளது. புகழ்பெற்ற நூபுர கங்கையில் ஒரு நாள் சுதபஸ் முனிவர் தண்ணீரில் மூழ்கி தவம் செய்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக துர்வாச முனிவர் தன் சீடர்களுடன் நூபுர கங்கைக்கு வருகை வந்தார். ஆனால், இவர் வருவதை சுதபஸ் முனிவர் கவனிக்கவில்லை. இதனால், கோபமடைந்த துர்வாச முனிவர் இன்றிலிருந்து நீ தவளையாக மாறுவாய் என்று சுதபஸ் முனிவருக்கு சாபமிடுகிறார். தன் தவறை உணர்ந்த சுதபஸ் முனிவர் மன்னிப்பு கேட்டார்.

அப்போது, மனமிறங்கிய துர்வாச முனிவர், சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தன்று மறுநாள் வரும் கிருஷ்ணபட்ச பிரதமை திதியில் சுந்தரராஜப்பெருமாள் உமக்கு சாபவிமோசனம் அளிப்பார் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். சாபத்தால் தவளையாக மாறிய சுதபஸ் முனியவர், சுந்தரராஜப்பெருமாளை நினைத்து வைகை கரையில் தவம் இருக்கிறார்.

சுதபஸ் முனியவர் செய்த தவத்தால், மனம் மகிழ்ந்த சுந்தரராஜப்பெருமாள் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்கி சுதபஸ் முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார் என்று புராணக் கதை சொல்கிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் என்று தனித்தனியாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், சைவ-வைணவ சமயங்களின் ஒற்றுமையை காத்திடும் வகையில் மதுரையை ஆண்ட மாமன்னர் திருமலைநாயக்கர் ஒரே விழாவாக இணைத்து நடத்தினார்.

இவையே அன்று முதல் இன்று வரை சித்திரை திருவிழாவாக மதுரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை திருவிழா தினத்தன்று, மலையை விட்டு இறங்கும் அழகரை எதிர்கொண்டு அழைத்து மதுரை மக்கள் எப்படி வரவேற்பு கொடுத்தார்களோ அதேபோன்று, அவரை வழியனுப்பவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரை எல்லையில் திரண்டு நின்றுக்கொண்டிருப்பார்கள். அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் ஒரு பெரிய மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.

அந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள் என பல வர்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டியை திறந்து கைவிட்டு ஒரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த புடவை சிக்குகிறதோ அந்தப் புடவையைத்தான் கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது அணிவிப்பார்கள்.

கள்ளழகர் பச்சை திறத்தில் புடவை கட்டி வந்தால் அந்த வருடத்தில் நாடு செழிப்பாக இருக்குமாம். சிவப்பு புடவை கட்டி வந்தால் அந்த வருடம் நாட்டில் அமைதி குலைந்து, பேரழிவு ஏற்படுமாம். வெள்ளை நிறத்தில் புடவை கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்குமாம். மஞ்சள் திறத்தில் புடவை கட்டி வந்தால் மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் அந்த வருடம் நடக்கும் என்று மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

கள்ளழகர் ஏன் வைகை ஆற்றில் இறங்குகிறார் தெரியுமா? வாங்க தெரிந்து கொள்வோம்..! | Kallalagar Alagar Madurai Chithirai Festival