‘குண்டாக இருப்பதால் கேலி செய்தான்..கெஞ்சி கேட்டும் நிறுத்தல’- நண்பனை வெட்டி கொன்ற மாணவன் பகிரங்க வாக்குமூலம்!
உருவ கேலி செய்ததால் ஆத்திரமடைந்து சக நண்பனை மாணவன் ஒருவன் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள தனியார் பள்ளியில் சிபிஎஸ்இ பதினோராம் வகுப்பு படித்து வரும் மாணவன் கோகுல்ராஜ் கடந்த 15-ம் தேதி இரவு திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் உள்ள அவன் படித்து வரும் பள்ளியின் பின்புறமே அரிவாளால் வெட்டப்பட்டும் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடனும் சடலமாக கிடந்தான்.
இந்நிலையில் கோகுலின் பெற்றோர்கள் 15-ம் தேதி இரவு தன் நண்பருடன் விருந்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மகனை காணவில்லை என திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த மாணவனை மீட்ட போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கோகுல்ராஜ் வீட்டில் இருந்த பொழுது அவனுடன் படிக்கும் அருண் ஆகாஷ் என்ற சக மாணவன் கடந்த 15-ம் தேதி இரவு கோகுல்ராஜ் வீட்டிற்கு சென்று பத்து நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அண்ணன் திருமணத்திற்காக பார்ட்டி கொடுப்பதாக கூறி அழைத்துள்ளார்.
இதனைக் கேட்ட கோகுல்ராஜ் தனது நண்பர் வீட்டில் பிறந்தநாள் விழா நடப்பதாகவும் அங்கு சென்று விட்டு வருவதாகவும் வீட்டில் கூறி விட்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் கோகுல்ராஜ் உடன் படித்து வரும் அவரது நண்பரும்,சக மாணவமான அருண் ஆகாஷ் என்ற மாணவனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், சக மாணவர்களை விட உடலளவில் பருமனாக தான் இருப்பதாகவும் அதை கோகுல்ராஜ் தினந்தோறும் கேலி செய்ததாலும், தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதனால் பத்து நாட்களுக்கு மேல் பள்ளிக்கு செல்லாமல் உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்மிற்கு சென்றதாகவும், பலமுறை எச்சரித்தும், நண்பனிடம் கெஞ்சி கேட்ட போதும் கூட தொடர்ந்து தன்னை கோகுல் கேலி செய்ததாகவும் கூறியுள்ளான்.
அதுமட்டுமில்லாமல் தனது குடும்பத்தில் உள்ளவர்களையும் கேலி செய்ததால் ஆத்திரமடைந்து அவனை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் தெரிவித்த அருண் ஆகாஷ், சம்பவத்தன்று அவர்களின் வீட்டிற்குச் சென்று நட்பாக பேசி விருந்து வைப்பதற்காக அழைத்துச்சென்று புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சிக்கன்ரைஸ் மற்றும் கறி வறுவல் வாங்கிக்கொண்டு பள்ளிக்குப் பின்புறம் உள்ள இடத்தில் இருவரும் சாப்பிட்டதாக தெரிவித்துள்ளான்.
சாப்பிட்டபின் கோகுல்ராஜ் தனது செல்போனில் ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்த பொழுது தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பின்புறமாக வந்து வெட்டியதாகவும், ஆத்திரம் தீரும் வரை பேனா கத்தியால் கோகுளிளின் உடலில் பல இடங்களில் குத்தி கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டான்.
இதனை கேட்டு அதிர்ந்து போன போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்ஆகாஷை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உருவ கேலி செய்ததால் ஆத்திரமடைந்து பழகிய நண்பன் என்றும் பாராமல் மாணவன் ஒருவன் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.