கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் மீண்டும் கிளம்பிய புதிய சர்ச்சை - தாய் பரபரப்பு குற்றச்சாட்டு..!
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொள்ளும் முன்பாக எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் இருப்பது தன் மகளின் கையெழுத்தே இல்லை என , அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
மாணவி மரணம் - மோதல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூரில் செயல்பட்டு வந்த , சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தவர் ஸ்ரீமதி. இவர் கடந்த 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில், இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து மாணவியின் தாயார் பேசிய வீடியோ வெளியானதை அடுத்து, கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பின்னர் போராட்டம் கலவரமாக வெடித்தது.
இதில் அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
தாய் பரபரப்பு பேச்சு
பின்னர் ஸ்ரீமதியின் தந்தை நீதிமன்றத்தை நாடியதை அடுத்து, மாணவியின் உடல் மறுகூராய்வு செய்யப்பட்டது. ஒருவழியாக 11 நாட்கள் கழித்து ஸ்ரீமதியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி இறப்பு குறித்து அவரது தாயார் செல்வி தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "உயிரிழந்த ஸ்ரீமதியின் தாய் மார்ச்சுவரியில் தான் என் மகளின் உடலை பார்த்தேன் , மகள் அணிந்திருந்த உள்ளாடை விலகி இருந்தது, உடல் விரைத்து போய் காணப்பட்டது.
ஸ்ரீமதி அணிந்திருந்த நகைகள் அவர் உடலில் இல்லை, தற்கொலை இல்லை என அப்போதே நாங்கள் உறுதி செய்தோம். எனக்கும் என் மகளுக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை, நானும் ஸ்ரீமதியும் ஃப்ரெண்ட்லியாக தான் பேசுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கலவரத்துக்கு நாங்கள் காரணமில்லை எனவும், வன்முறை என்பது எங்களின் நோக்கமில்லை, வழக்கை திசை திருப்ப பள்ளி நிர்வாகம் திட்டமிட்டு செய்த செயல் இது என்று கூறியுள்ளார்.
ஸ்ரீமதி அணிந்திருந்த உடையின் பாக்கெட்டில் தற்கொலை கடிதம் இருந்ததாக சொன்னார்கள். ஆனால் எங்களிடம் அப்போதே கடிதத்தை காட்டியிருக்கலாம், மேலும் கடிதத்தில் இருப்பது என் மகளின் கையெழுத்தே இல்லை என்று தெரிவித்தார்.
என் மகளின் பொருட்களை கண்ணில் காட்டவில்லை எனவும், மகள் அணிந்திருந்த செயின் அறுக்கப்பட்டதாக சொன்னார்கள் நகைகள் எங்கே என தெரியவில்லை என்றார்.
பிரேதத்தை வைத்துக் கொண்டு பேரம் பேசவில்லை என்று குறிப்பிட்ட அவர், சிபிசிஐடியை நாங்கள் கடவுளாக பார்க்கிறோம் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வருவார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.
அத்துடன் ஒருவேளை உண்மை வராவிட்டால் சிபிஐ விசாரணைக்கும் செல்வேன் என்றும் ஸ்ரீமதியின் தாயார் தெரிவித்திருக்கிறார்.