மாணவி ஸ்ரீமதி வழக்கில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமீன்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி வழக்கில் பள்ளி தாளாளர், ஆசியர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவி மரணம்
கள்ளக்குறிச்சியில் ஜுலை17 ஆம் தேதி கனியாமூரில் உள்ள சக்தி தனியார் பள்ளியில் மாணவி மரணம் தொடர்பாக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.
இதையடுத்து மாணவியின் மரணம் தொடர்பாக பெற்றோர் நீதிமன்றத்தில் மாணவியின் உடற்கூறாய்வின் போது தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் மருத்துவர் குழுவை ஒன்றை நியமித்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது.
பின்னர் மாணவியின் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர் உடலை நல்லடக்கம் செய்தனர். மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி நிர்வாகிகள் கைது
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் 5 பேரும் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அப்போது 5 பேருக்கும் ஜாமீன் வழங்க கூடாது என மாணவியின் தாய் எதிர்ப்பு தெரிவித்தார்.
சிபிசிஐடி போலீசாரும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.