கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் - எடுத்துச் சென்ற பொருட்களை சாலையில் வீசிவிட்டுச் சென்ற மக்கள்
மாணவி ஸ்ரீமதி
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் +2 வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 12ம் தேதி இரவு மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளியின் 3வது மாடியிலிருந்து குதித்து மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பள்ளி வளாகத்தை தீக்கிரையாக்கிய மக்கள்
ஆனால் மாணவி மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 17ம் தேதி பள்ளி முன்பு மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைப்பெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தி தனியார் பள்ளி வளாகத்திற்குள் அதிரடியாக நுழைந்து அங்கிருந்த வாகனங்கள், பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதோடு, தீ வைத்தும் கொளுத்தினர். பள்ளி வளாகமே தீக்கரையானது.
பொருட்களை வீசிவிட்டுச் சென்ற மக்கள்
இந்த கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை தனிப்படை போலீசார் காட்சிகளை வைத்து கைது செய்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறார்கள். கலவரத்தின்போது பள்ளி வளாகத்தில் இருந்து பொதுமக்கள் எடுத்துச் சென்ற மேசை, டேபிள், மின்விசிறி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை திரும்ப பள்ளி வளாகத்தில் வைக்குமாறு காவல்துறையினர் தண்டோரா மூலம் அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து, பொருட்கள் எடுத்துச் சென்ற பொதுமக்கள் டேபிள், சேர், மின்விசிறி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை சாலையோரமாக வீசிவிட்டு சென்றுள்ளனர்.