மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு விவகாரம் - கனியாமூர் பள்ளியை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி

Kallakurichi School Death Kallakurichi Madras High Court
By Thahir Nov 15, 2022 10:56 AM GMT
Report

கனியாமூர் பள்ளியை திறக்க அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளியை திறக்க மனு 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது தொடர்பாக கடந்த ஜுலை மாதம் 17ம் தேதி நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது சக்தி மெட்ரிக் பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.

இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி தொடர்ந்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு விவகாரம் - கனியாமூர் பள்ளியை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி | Kallakurichi School Reopening

தாக்குதலுக்கு உள்ளான பள்ளி சீரமைக்கப்பட்ட நிலையில், பள்ளியை திறக்க கோரி பள்ளியை நிர்வாகம் செய்யும் லதா கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பள்ளியின் சீரமைப்பு பணிகளை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறினார். மேலும் பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிலம்பண்ணன், ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும். கிடைத்த பின்னர் பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். அடுத்த விசாரணையின் போது இதன் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.

பள்ளியை திறக்க அனுமதி 

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி ஆய்வுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவை தாக்கல் செய்ய வேண்டும். எனக் கூறி வழக்கின் விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என பள்ளி நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் ஒரு மாதத்திற்கு பிறகு மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளது.