கள்ளக்குறிச்சி கலவரம் ; மாணவியின் உடல் இன்று மறுபிரேத பரிசோதனை
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் மாணவியின் உடல் இன்று மறுபிரேத பரிசோதனை செய்யப்படுவதை அடுத்து மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கலவரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்பட 58 பேர் காயமடைந்தனர்.
பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள். பள்ளியின் நுழைவு வாயில் கேட்டை உடைத்த அவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வந்து சாலையில் போட்டு தீவைத்து எரித்தனர்.
மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்தனர். பேருந்துகள் கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி புகைமண்டலமாக மாறியது.
இந்த நிலையில் மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
இன்று மறுபிரேத பரிசோதனை
மேலும் மாணவியின் உடலை இன்று மறு பிரேத பரிசோதனை செய்ய அனுமதியளித்தார். மேலும் மறுபிரேத பரிசோதனையின் போது அவரது தந்தை உடனிருக்கவும் அனுமதி வழங்கினார்.
மறுபிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.
இதனிடையே மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யும் அரசு மருத்துமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.