கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் மத்திய சிறையில் அடைப்பு..!

Kallakurichi School Death Kallakurichi
By Thahir Jul 29, 2022 07:37 AM GMT
Report

கள்ளக்குறிச்சி கனியாமூர் கலவரத்தில் 16 வயது இளம் சிறார் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக பெற்றோர் தாக்கல் செய்த புகார் மனுவை அடுத்து இளம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கலவர வழக்கில் கைது 

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் 300-க்கும் மேற்பட்ட வன்முறை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு கடலூர் மற்றும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் மத்திய சிறையில் அடைப்பு..! | Kallakurichi Riot Case 16 Year Boy Central Jail

இந்நிலையில் மாதவசேரி கிராமத்தைச் சேர்ந்த அய்யாதுரை என்ற கூலி தொழிலாளி கடந்த 17ம் தேதி முதல் தனது மகனை காணவில்லை என தேடி வந்த நிலையில் அந்த 16 வயது இளம் சிறார் கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரிய வந்தது.

16 வயது சிறுவன் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைப்பு 

இதனை அடுத்து சிறுவனின் பெற்றோர்கள் காவல் நிலையம் சென்று தனது மகன் 16 வயது சிறுவன் எனவும் சின்னசேலம் மருந்து வாங்க சென்று விட்டு வரும் வழியில் அவனை கைது செய்துள்ளீர்கள் எனவும் மன்றாடிய பொழுது காவல்துறையினர் அவர்களை விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர்கள் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலமாக தங்களது மகன் இளம் சிறார் எனவும் காவல்துறையினர் அவனின் வயதை மறைத்து வன்முறை குற்றவாளிகளுடன் மத்திய சிறையில் அடைத்து விட்டதாகவும் சிறுவனின் மாற்றுச் சான்றிதழ் பிறப்புச் சான்றிதழ் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் சமர்ப்பித்து சரிபார்த்து உரிய நியாயம் கிடைக்க வேண்டுமெனவும்,

கொடுத்த புகாரை அடுத்து கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது அலி உத்தரவின் பேரில் காவல்துறையினர் இன்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுவனை அழைத்து வந்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ஆவணங்களை சரிபார்த்த நீதிபதி முகமது அலி நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த 16 வயது இளம் சிறாரை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அழைத்து செல்ல உத்தரவிட்டார்.