கடனுக்காக அனுதாபம் தேடிய தாய் - பெற்ற மகளையே கொன்ற கொடூரம்
கடன் தொல்லையால் 7 வயது மகளை தாயே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன மகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது பூட்டை கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பிரகாஷ். இவருக்கு சத்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி இவர்களுக்கு 13 வயதில் ஆதவன் என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர்.
இதில், 2 வது வகுப்பு படிக்கும் 3வது மகளான அதிசயா(7) கடந்த சனிக்கிழமை(10.08.2024) காணாமல் போனதாக சங்கராபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணை
அதிசயாவை காணாத நிலையில், அன்று ஊரில் நடைபெற்ற தேர் திருவிழாவை கூட கொண்டாட முடியாமல் கிராமமே சோகத்தில் மூழ்கியது. மழை கொட்டிய நிலையில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டையை நடத்தினர். இதன் பின் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது சிறுமி அதிசயாவை தாய் சத்யா தன்னுடன் அழைத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. ஆனால் திரும்ப வரும் போது சத்யா தனியாக வந்துள்ளார்.
இதில் சந்தேகமடைந்த காவல் துறையினர், சத்யாவை பிடித்து தீவிர விசாரணை செய்தனர். அப்போது, சிறுமியை அருகிலுள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேற்கொண்ட நடத்திய விசாரணையில், பல்வேறு நபர்களிடமிருந்து தனது கணவருக்கு தெரியாமல் ரூ.5 லட்சம் வரை கடன் பெற்றதாகவும், அதனை வருகின்ற அமாவாசை அன்று திருப்பித் தருவதாக கூறியுள்ளார்.
வாக்குமூலம்
ஆனால், அதற்குள் பணத்தை திரும்பித் தர வருமானம் இல்லாமல் தவித்துள்ளார். இந்நிலையில், தனது மகளை கொலை செய்துவிட்டால் துக்க நிகழ்வு நடந்த வீட்டில் அனுதாபத்தில் கடன்காரர்கள் வந்து பணம் கேட்க மாட்டார்கள் என நினைத்து, குழந்தையை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதன் பின் சத்தியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடன் தொல்லையால் தாயே மகளை கொன்று விட்டு நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.