கள்ளக்குறிச்சி மாணவி கொலை செய்யப்படவில்லை : உயர் நீதிமன்றம் கருத்து

Crime Kallakurichi School Death Kallakurichi
By Irumporai Aug 30, 2022 03:12 AM GMT
Report

 கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவி பாலியல் துன்புறுத்தலோ, கொலையோ செய்யப்படவில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் படித்த மாணவி மரண விவகாரத்தில், அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில், சின்னசேலம் போலீஸார், தனியார் பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர், வேதியல் ஆசிரியர், கணித ஆசிரியர் ஆகிய ஐந்து பேரைக் கைதுசெய்த, சிறையில் அடைத்தனர். அதையடுத்து, முதல்வர் உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாணவி கொலை செய்யப்படவில்லை : உயர் நீதிமன்றம் கருத்து | Kallakurichi Girl Death Not Murder Highcourt

இந்த நிலையில், பள்ளியின் தாளாளார், செயலாளர் உட்பட 5 பேரும், ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அவர்கள் ஐந்து பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

மேலும், விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. இந்த சூழலில், வழக்கின் தீர்ப்பு விவரங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. அந்தத் தீர்ப்பில், ஜிப்மர் மருத்துவக் குழுவினரின் ஆய்வறிக்கையின்படி, அந்த மாணவி கொலையோ, பாலியல் வன்கொடுமையோ செய்யப்படவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

ஆசிரியர்கள் சிறைவாசம் துரதிஷ்டவசமானது

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் மதுரையிலும், 2 ஆசிரியைகள் சேலத்திலும் தங்கியிருக்க வேண்டும். மாணவ-மாணவிகளை படிக்க அறிவுறுத்துவது ஆசிரியர் பணியின் ஒரு அங்கம். மாணவியை படிக்க அறிவுறுத்தியதற்காக ஆசிரியர்கள் சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது.

படிப்பில் சிக்கல்களைச் சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டது வருத்தமளிக்கிறது. மருத்துவ அறிக்கையின்படி, மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தலோ அல்லது கொலையோ செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. அவர் தற்கொலைதான் செய்துள்ளார்.

மாணவி கொலை செய்யப்படவில்லை

மாணவியின் மரணத்தில் பல்வேறு முரண்பாடுகளை கூறினாலும், அந்த குற்றச்சாட்டுகள் பாலியல் குற்றச்சாட்டுக்கோ அல்லது கொலைக்கோ பொருந்தவில்லை . மாணவி தனது கடிதத்தில், வேதியியல் சமன்பாடுகள் தனக்கு சரியாக தெரியவில்லை என்ற விவரத்தை வேதியியல் ஆசிரியை, கணித ஆசிரியையிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

பிளஸ் 2 தேர்வு எதிர்காலத்துக்கு முக்கியமானது என்பதால் பல பெற்றோர் தங்களது குழந்தைகளை குடும்ப சூழல் குறித்து கவலை கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக விடுதியில் தங்கவைத்து படிக்க வைக்கின்றனர்.

நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என குழந்தைகளை கட்டாயப்படுத்துகின்றனர். வேதியியல் பாடம் தனக்கு கடினமாக இருப்பதால் வீட்டிலிருந்து படிக்கிறேன் என அந்த மாணவி தனது பெற்றோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மாணவியின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள் மற்றும் ரத்தக் கசிவுகள் மாடியில் இருந்து விழுந்ததால் ஏற்பட்டு இருக்கலாம். மர்ம உறுப்பிலும் காயங்கள் இல்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மாடியில் ரத்த மாதிரிகள் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

ஆசிரியர்கள் மிரட்டப்படுவது வருந்தத்தக்கது

அதை ஆய்வு செய்த தடய அறிவியல் துறை நிபுணர்கள், அது ரத்தம் அல்ல. சிவப்பு நிற பெயின்ட் என கூறியுள்ளனர்.கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்கள், மாணவர்களாலும் பெற்றோராலும் மிரட்டப்படுவது வருந்தத்தக்கது. எனவே, போக்ஸோ சட்டப்பிரிவு 305 மனுதாரர்களுக்கு பொருந்தாது.

ஆகவே, பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியைகள் என 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் அளிக்கப்படுகிறது. ஆசிரியைகள் தவிர்த்து மற்ற 3 பேரும் மதுரையில் தங்கியிருந்து 4 வாரங்களுக்கு தல்லாகுளம் காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை என இரு வேளைகளில் கையெழுத்திட வேண்டும்.

அதன்பிறகு 4 வாரங்களுக்கு சிபிசிஐடி போலீஸார் முன்பாக ஆஜராகி கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும்.

ஆசிரியைகள் இருவரும் சேலத்தில் தங்கியிருந்து செவ்வாய் பேட்டை காவல் நிலையத்தில் 4 வாரங்களுக்கு இருவேளைகளில் கையெழுத்திட வேண்டும். அதன்பிறகு 4 வாரங்கள் சிபிசிஐடி போலீஸார் முன்பாக ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.