கள்ளக்குறிச்சி காங்கிரஸ் வேட்பாளர் விபத்தில் சிக்கினார்! 4 பேர் படுகாயம்!
சட்டமன்றத் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் இன்றுடன் தேர்தல் பரப்புரை அனைத்தும் முடிந்துவிடும். தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது மிக விரைவில் அறியும் தருணம் நெருங்கி வருகிறது.
இதனையடுத்து, கள்ளக்குறிச்சி தனித் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தேர்தல் களத்தில் கே.ஐ.மணிரத்தினம் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். பிரச்சாரத்திற்காக இன்று காலை உளுந்தூர்பேட்டை பகுதியிலிருந்து கள்ளக்குறிச்சி பகுதிக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தியாகதுருகம் அருகே சின்ன மாம்பட்டு கிராமப் பகுதியில் எதிர்பாராத விதமாக முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க முயன்றி செய்துள்ளார்.

அப்போது விபத்து நேராமல் இருக்க கார் ஓட்டுநர் காரைத் திருப்பியபோது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் மணிரத்னம், அவரது மகன் அரவிந்தன், அவரது உதவியாளர் திருநாவுக்கரசு, ஓட்டுநர் கவுதமன் ஆகியோர் படுகாயமடைந்தனர். நால்வரும் கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.