காதல் விவகாரம் சடலமாக மீட்கப்பட்ட சிறுவர்கள்: கொலையா? தற்கொலையா ? போலீசார் விசாரணை

children suside KALLAKURICHI
By Irumporai Nov 24, 2021 07:26 AM GMT
Report

 கள்ளக்குறிச்சி சோமண்டார்குடி ஆற்றின் அருகே 12-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் சிறுமி இருவர் சடலமாக மீட்க்கப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி அடுத்து குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு படித்துவரும் சிறுவன் மற்றும் சிறுமியை காணவில்லை என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கச்சராபாளையம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக போலீசார் இருவரையும் தேடி வந்தனர். சிறுவனின் ஃபோன் சோமண்டார்குடி ஆற்றின் அருகே ஆப் ஆகி இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் அங்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை சோமண்டார்குடி ஆற்றங்கரையோரம் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு விரைந்த போலீசார் ஆற்றின் கரையோரம் ஒதுங்கியிருந்த சிறுமியின் உடலையும் மரத்தில் தூக்கில் தொங்கப்பட்ட நிலையில் சிறுவனின் உடலையும் கைப்பற்றினர்.

  மேலும் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் இரு சிறுவர்களும் காதலித்து வந்ததாகவும், வீட்டில் காதல் விவகாரம் தெரியவந்ததும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியேறி இந்த முடிவை எடுத்திருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் இது உண்மையில் தற்கொலையா அல்லது திட்டமிடப்பட்ட கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குதிரைசந்தல் கிராம மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.