"அம்பாள் எந்த காலத்தில் பேசினாள்" : 70 ஆண்டுகளை நிறைவு செய்த பராசக்தி

By Irumporai 1 மாதம் முன்

திராவிடர் இயக்கத் திரைப்படங்களில் திருப்பு முனையாக அமைந்த பராசக்தி திரைப்படம் வெளியாகி 70 ஆண்டுகளை கடந்துள்ளது ,தமிழ் திரைப்பட வரலாற்றிலும் அரசியல் வரலாற்றிலும் பராசக்தி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து காண்போம்.

பராசக்தி 

 திராவிட இயக்கக் கருத்துகளைத் தாங்கிப் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன என்றாலும், மூன்று திரைப்படங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. வேலைக்காரி, பராசக்தி, ரத்தக்கண்ணீர் ஆகிய மூன்று படங்களே அவை! கடவுள், புராணக் கதைகளை மட்டுமே பேசிக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலகம்.

பிறகு ராஜா ராணி கதை பற்றி பேசத் தொடங்கியது. சாதாரண மக்களைப் பற்றி அதிலும் உழைக்கும் மக்களைப் பற்றிப் பேசிய முதல் படம் வேலைக்காரி அந்த வகையில் அதேபோலத்தான் 1952 ஆம் ஆண்டு ஒரு தீபாவளி நாளில் வெளிவந்த பராசக்தியும் சமூகப் புரட்சிக்கு வித்திட்ட படம் என்று கூற வேண்டும்.

"அம்பாள் எந்த காலத்தில் பேசினாள்" : 70 ஆண்டுகளை நிறைவு செய்த பராசக்தி | Kalaignar Masterpiece Parasakthi

அப்படம் வெளியான நாள் 1952 அக்டோபர் 17. இன்றைக்கு நாம் அதனை ஒரு படமாகப் பார்க்கலாம். ஆனால் அன்றைக்கு அது ஒரு சமூகப் புரட்சி,திரையரங்குகளில் நடிகர்கள் பெயர் வரும்போது மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த கைதட்டிய கைகள் முதன்முதலாக அப்படத்தில் வசனகர்த்தாவிற்கும் கேட்கத் தொடங்கின.

திரைப்படப் பாடல் புத்தகங்கள் மட்டுமே விற்றுக் கொண்டிருந்த காலத்தில், முதன்முதலாக வசனப் புத்தகங்கள் விற்கத் தொடங்கின, இதற்கெல்லாம் காரணம் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி , அவரது வசனங்கள் தமிழ் சினிமாவில் புதிய திருப்பத்தை கொண்டு வந்தன.

சிவாஜியின் அனல்பறக்கும் வசனங்கள்

அந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று அன்று முதலமைச்சராக இருந்த ராஜாஜிக்கு அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம், பெரியார் முழக்கம் ஏட்டில் சென்ற ஆண்டு வெளிவந்திருந்தது. அந்த அளவிற்கு வரவேற்பையும் எதிர்ப்பையும் எதிர்கொண்ட ஒரு திரைப்படம் பராசக்தி.

அந்தப் படம் வெளிவந்து எழுபது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் இன்று வரையில் அந்தப் படம் ஏற்படுத்திய அதிர்வலைகள் நம் காதுகளில் விழுந்து கொண்டே இருக்கின்றன.

குறிப்பாக குணசேகரனாக வரும் சிவாஜி கணேசனின் இந்த வசனங்கள் இப்போதும் அனல் பறக்கும்

இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.


கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று.

இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன்.

அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக. உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன்.

சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் அதைப் போல.

என் தங்கை விட்டுக் கொடுத்திருந்தால், கோடீஸ்வரன் பள்ளியறையிலே ஒரு நாள் – மானத்தை விலை கூறியிருந்தால், மாளிகை வாசியின் மடியிலே ஒரு நாள்  இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை.

இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது? பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்.

அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என் கல்யாணியை? அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

குணசேகரன்: யார் வழக்கிற்குமில்லை. அதுவும் என் வழக்குதான். என் தங்கையின் வழக்கு. தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம்.

குழந்தையைக் கொன்றது ஒரு குற்றம். நான் பூசாரியைத் தாக்கியது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? கல்யாணியைக் கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா?

கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை.

இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம் பராசக்தி என்பது வெகுமக்கள் வழிபடும் கடவுளின் பெயர்.

ஒரு கடவுளின் பெயரை வைத்து ஆன்மீக நம்பிக்கை உள்ள மக்களை திரையரங்கிற்கு அழைத்து வந்து கடவுளுக்கு எதிராக அல்ல கடவுளின் பெயரால் சிலர் நடத்தும் அக்கிரமங்களுக்கு எதிராக ஆன்மீகவாதிகளுக்கு கலைஞர் எடுத்த பாடம்தான் பராசக்தி. அதன் தேவை இன்றளவும் உள்ளதால்தான் அழியாக்காவியமாக பராசக்தி இன்றும் நின்று நிலைக்கிறது