”நவீன தமிழ்நாட்டின் தந்தை கருணாநிதி” தமிழ்நாட்டின் சந்தித்த தலை சிறந்த நிர்வாகி!
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இன்று 98வது பிறந்தநாள். தன் வாழ்நாளில் 75 ஆண்டுகளை பொது வாழ்வில் கழித்தவர். 60 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தோல்வியே காணாதவர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக நாட்கள் பதவியில் இருந்தவர் எனப் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர் கருணாநிதி.
எழுத்து, இலக்கியம், சினிமா, அரசியல் என கால் பதித்த துறைகளில் எல்லாம் தனக்கென தனித்தடம் பதித்தவர். கருணாநிதியின் கொள்கை அரசியலோடு முரண்படும் அவருடைய அரசியல் எதிரணியினர் கூட அவருடைய நிர்வாகத் திறமையை பாராட்டாமல் இருப்பது இல்லை.தமிழகம் இதுநாள் வரை சந்தித்த முதல்வர்களில் தலைசிறந்த நிர்வாகி கருணாநிதி என்றால் மிகையாகாது.
நவீன இந்தியாவின் சிற்பி என்று நேருவை அழைப்பது உண்டு, அதே போல் நவீன தமிழகத்தின் சிற்பி கருணாநிதி. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த நேரு அறிவியலுக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியாவுக்கான பிரம்மாண்டமான பொதுத்துறை கட்டமைப்புகளை உருவாக்கினார்.
அதே போல தமிழகம் இன்று பல்வேறு துறைகளிலும் முன்னணியில் இருப்பதற்கான கட்டமைப்புகள் திமுகவின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவையே. இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் 1967-ல் நடைபெற்ற தேர்தல் தான் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
அப்போது நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் இணைந்தே தேர்தல் நடைபெற்றது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைத்து கொண்டாலும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை இழந்தது. தமிழகத்தில் திமுக பிரம்மாண்ட வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அண்ணா முதல்வரானார். அன்று தொடங்கி 54 ஆண்டுகள் கழித்து இன்று வரை தமிழக அரசியல் பரப்பை இரு திராவிட கட்சிகளே ஆக்கிரமித்து வைத்துள்ளன.
மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்சியில் அமர்ந்த திமுக பல அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்காக அண்ணா மறைந்துவிட ஆட்சி பொறுப்பு கருணாநிதி வசம் வருகிறது. இந்தக் காலகட்டத்தில் தான் தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைகிறது.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.நாராயணன் The Dravidian years என்கிற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் தமிழகத்தின் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி மிக விரிவாக விவரித்துள்ளார். இந்திய மனித வள மேம்பாடு குறியீடுகளில் தமிழகம் தான் பெரும்பாலானவற்றில் முன்னணியில் இருக்கிறது.
நலத்திட்டங்களை மக்களுக்கு நல்லவையாக இருந்தாலும் அதை அவர்கள் மீது திணிக்க முடியாது என்பதை கருணாநிதி நன்கு உணர்ந்தே இருந்தார். பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கு தமிழகத்தில் பல உதவித் தொகைகள் வழங்கும் திட்டங்கள் அமலில் இருந்து வருகிறது. அது பெண்கள் கல்வி பெறுவதை ஊக்குவித்ததோடு மட்டுமில்லாமல் பொருளாதார ரீதியாக நல்ல பலன் அளித்ததாகவும் விவரிக்கிறார்.
தமிழகத்தின் கல்வி கற்றவர்களின் விகிதம் 1967 35% ஆக இருந்தது 1977-;’ 54% ஆக உயர்ந்தது. திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகம் வளர்ச்சி அடைந்தது என்று சொல்வதால் அதற்கு முன்னர் தமிழகம் வளரவே இல்லை என்று பொருள் அல்ல. தொடக்க கல்விக்காக தமிழகம் முழுவதும் பள்ளிகள் தொடங்கப்படுவதை காமராஜர் உறுதி செய்கையில் அதன் நீட்சியாக கல்லூரிகள் மற்றும் உயர்கல்வியில் தமிழகம் தொடர்ந்து முன்னேறுவதை திராவிட கட்சிகள் உறுதி செய்தன.
மாணவர்கள் உயர்கல்வியில் சேரும் குறியீடான gross enrollment ratioவில் தமிழகம் தான் இந்தியாவிலே முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் அதிக அளவிலான மருத்துவ கல்லூரிகளும் இடங்களும் உள்ளன கருணாநிதி முதல்வரான பிறகு மத்திய அரசுக்கு உள்ளதைப் போல மாநில அரசுக்கும் தனியாக திட்டக்குழுவை உருவாக்கினார்.
தொழிற்துறையில் தமிழகம் சிறந்த சிப்காட் போன்ற பல்வேறு தொழிற்பூங்காக்கள் தமிழகம் முழுவதும் உருவாக்கப்பட்டன. 21-ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பம் தான் மிகப்பெரும் சந்தையாக உருவெடுக்கும் என்பதை இந்திய அரசுக்கு முன்பாகவே கணித்தவர் கருணாநிதி 1997-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்திற்கு என தனிக் கொள்கையை அறிவித்து டைடல் போன்ற தொழிற்பூங்காக்களை தமிழகம் முழுவதும் உருவாக்கினார்.ஐ.டி துறையில் இன்று தமிழகம் முன்னணியில் இருக்க இதுவே காரணம்.
கருணாநிதியின் பெரும்பாலான திட்டங்கள் சமூக பார்வை கொண்டதாக இருக்கும் என்பதற்கு சமத்துவபுரம் ஒரு மிகச்சிறந்த உதாரணம். ஊரும் சேரியுமாக தமிழகம் இரண்டாக பிரிந்து இருக்கையில் அனைத்து சமூகங்களையும் ஒரே இடத்தில் குடியமர்த்தும் தொலைநோக்கு பார்வை கொண்டதே சமத்துவபுரத் திட்டம். விவசாயிகளுக்கு சமமான வாய்ப்பை வழங்கும் உழவர் சந்தை திட்டமும் அதற்கு ஒரு உதாரணம்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொள்ளாத சமூகம் தேக்கமடைந்துவிடும். digital divide என்கிற விஷயம் இன்றைய காலகட்டத்தில் பரவலாக பேசப்படுகிறது. தொழில்நுட்பங்களை கையாள்வதில் அதன் பலன்களை பெறுவதில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறிப்பது தான் அது. அந்த ஏற்றத்தாழ்வுகளை குறைப்பது தான் அரசாங்கத்தின் வேலை.
அவ்வாறு கிராமங்களில் ஒரு வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சிகள் இருந்து அதைச் சார்ந்து தான் அந்த ஊரில் உள்ள மற்றவர்கள் இருந்த நிலையை மாற்றியது தான் தமிழக அரசின் வண்ண தொலைக்காட்சி திட்டம். அவ்வாறு சமமான வசதிகளை அனைவரும் பெற வேண்டும் என தொலைநோக்கு எண்ணத்தோடு உருவாக்கப்பட்டது தான் அண்ணா நூற்றாண்டு நூலகமும்.
கருணாநிதி ஆட்சி செய்த காலத்தில் அவர் மீது குறைகள், விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. கருணாநிதியும் தன்னை குறைகள் அற்ற ஒருவராக காட்டிக் கொள்ள எண்ணியதும் இல்லை. ஆனால் நிர்வாக ரீதியாக இன்று தமிழகம் அடைந்திருக்கும் வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை புறக்கணித்துவிட முடியாது. தமிழகம் இதுநாள் வரை சந்தித்துள்ள முதல்வர்களில் தலைசிறந்த நிர்வாகி கருணாநிதி என்பது எவரும் மறுதலிக்க முடியாத உண்மை.