கடலில் இறக்கப்பட்ட ககன்யான் மாதிரி விண்கலம் - மீட்ட கடற்படை

Indian Space Research Organisation
By Thahir Oct 22, 2023 04:14 PM GMT
Report

வங்கக்கடலில் இறக்கப்பட்ட ககன்யான் விண்கலத்தை மீட்ட இந்திய கடற்படையினர் இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

விண்ணில் ஏவப்பட்ட ககன்யான் விண்கலம்

இஸ்ரோ சார்பில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக மாதிரி விண்கலம் டிவி - டி1 ராக்கெட் மூலம் நேற்று (21.10.2023) காலை 10 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ககன்யான் திட்டத்துக்கான மாதிரி விண்கலத்தை சுமந்து செல்லும் டிவி-டி1 என்ற ஒற்றை பூஸ்டர் திறன் கொண்ட ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

மேலும் மாதிரி விண்கலம் விண்ணில் 17 கி.மீ. தொலைவுக்கு ஏவப்பட்டு பின்னர் பாராசூட் மூலமாக பத்திரமாக கடலில் இறக்கப்பட்டது.

கடலில் இறக்கப்பட்ட ககன்யான் மாதிரி விண்கலம் - மீட்ட கடற்படை | Kaganyan Type Spaceship Launched Into The Sea

அதனைத் தொடர்ந்து கடலில் விழுந்த ககன்யான் பயணிகள் கலன் இந்திய கப்பல் படையால் மீட்கப்பட்டது. இதன் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார்.

இந்திய கடற்படையினர் மீட்பு

ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் இஸ்ரோவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதற்கட்டமாக சோதனை முறையில் விண்ணில் ஏவப்பட்ட ககன்யான் விண்கலம், பாராசூட் மூலம் வங்கக்கடலில் இறக்கப்பட்டதை இந்திய கடற்படையினர் மீட்டு சென்னை துறைமுகத்திற்குக் கொண்டு வந்து அதனை இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

சுமார் 4 டன் எடை கொண்ட விண்கலத்தை கனரக கண்டெய்னர் வாகனத்தில் ஏற்றி மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்பு மூலம் சென்னை துறைமுகத்தில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்துக்கு கொண்டு சென்றனர்.