திமுக ஆதரவு வாபஸ்- மீண்டும் ராமதாஸ் பக்கம் சாய்ந்த காடுவெடி குரு மகன்

guru dmk kaduvetti
By Jon Mar 04, 2021 02:00 PM GMT
Report

பாமகவின் முக்கியப் புள்ளியும் முன்னாள் வன்னியர் சங்கத்தின் தலைவருமான காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் திமுகவுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றார். நாடாளுமன்ற தேர்தலைத் தொடர்ந்துசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. காடு வெட்டி குருவின் மகன் கனலரசன் மாவீரன் மஞ்சள் படை என்கிற அமைப்பை தொடங்கி பாமகவுக்கு எதிராக செயல்பட்டு வந்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். தற்போது பாமகவின் கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கு 10.5 % உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. இதனால் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 சீட்டுகளுக்கு பாமக ஒப்புகொண்டது.

இந்த சூழலில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தொடர்பாக பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தில் முக்கிய புள்ளியாக இருந்த காடுவெட்டி குரு மகன் கனலரசன் மீண்டும் பாமக பக்கம் சாய தொடங்கியுள்ளார். தனது தந்தை மரணத்திற்கு காரணம் ராமதாஸ் மற்றும் அன்புமணி தான் என்று வெளிப்படையாக மல்லுக்கட்டிய கனலரசன் ‘மாவீரன் மஞ்சள் படை’ என்கிற இயக்கத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

இதனால் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய கனலரசன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை சந்தித்து பேசினார். இந்நிலையில் வன்னியர்களுக்கு 10.5 % உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் திமுகவுக்கு கொடுத்த ஆதரவை கனலரசன் திரும்ப பெற்றுள்ளார்.

அத்துடன் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற உதவியதாக, பாஜக தலைவர்கள், அமைச்சர் சி.வி.சண்முகம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அழுத்தம் கொடுத்த பாமக, ஆதரித்த சீமான் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.