ஜெயிலர் டிக்கெட் வாங்கிக்கோங்க..! மாநாட்டிற்கு வாங்க..! நூதனமாக அழைக்கும் முன்னாள் அமைச்சர்
நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கு ரஜினி ரசிகர்களுக்கு ஜெயிலர் பட டிக்கெட்டை வழங்கி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு நூதன முறையில் அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக மாநாடு
வரும் 20-ஆம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் என பல நிகழ்ச்சிகள் உட்பட வருபர்வர்கள் அனைவருக்கும் சாப்பாடு என மாநாட்டின் ஏற்பாட்டில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக பதவியேற்று நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதில் இதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
கடம்பூர் ராஜுவின் நூதன முறை
இந்த மாநாட்டிற்காக பொதுமக்களை அழைக்கும் பணியிலும் அதிமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில் தற்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு நூதன முறை ஒன்றை கையாண்டுள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் ரஜினி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதனை கடம்பூர் ராஜு பயன்படுத்தி கொண்டுள்ளார்.
கோவில்பட்டியிலுள்ள சத்தியபாமா திரையரங்கில் இன்று 'ஜெயிலர்' காலை காட்சிக்கான மொத்த டிக்கெட்டுகளையும் அதாவது 550 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த அவர், படம் பார்க்க வந்த அனைவருக்கும் இலவசமாக டிக்கெட்டுகளை வழங்கி இருக்கிறார்.
இதன் மூலம் அவர் மாநாட்டிற்கு வரும்படியும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.