"கடம்பூர் பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் ரத்து" - மாநில தேர்தல் ஆணையம்
கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 12 வார்டுகளில் 3,295 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த 12 வார்டுகளிலும் போட்டியிடுவதற்காக மொத்தம் 33 பேர் மனுதாக்கல் செய்த நிலையில் வார்டு 1, 2 மற்றும் 11 ஆகியவற்றில் தலா 2 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
திமுக சார்பில் 1, 2 மற்றும் 11-ம் வார்டுகளில் திமுக சார்பில் தலா ஒரு வேட்பாளரும் சுயேட்சசையாக மூன்று வார்டுகளில் தலா ஒரு வேட்பாளரும் மனு தாக்கல் செய்துள்ள நிலையில்,
கடந்த 5-ந்தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின்போது தி.மு.க. சார்பில் மூன்று வார்டுகளில் மனுதாக்கல் செய்திருந்த வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
போடியிடுபவர்களுக்கு முன்மொழிந்தவர்களின் கையெழுத்துக்கள் போலியாக இருந்ததாக கூறி அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகும் சூழல் ஏற்பட்டு மீதம் உள்ள 9 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவது உறுதியானது.
இந்நிலையில் 3 வார்டு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்காமல் அதிகாரிகள் ஒரு கட்சிக்கு சாதகமாக நடந்துக்கொள்வதாக கூறி சுயேட்சை வேட்பாளர்களும் அவரது ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டரும் போராட்டக்காரர்களிடம் தொடர்புகொண்டு பேசி சம்பத்தப்பட்ட அதிகரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதன்படி நள்ளிரவு 1 மணியளவில் கடம்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவு நகல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
அதில், “தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தேர்தலை நடத்த நியமிக்கப்பட்ட செயல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்
மாநில தேர்தல் ஆணையத்தால் சொல்லப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும், தேர்தல் விதிமுறைகளையும் பின்பற்றாத காரணத்தினால் கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் பேரூராட்சி செயல் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படி தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.