சசிகலா இணைப்பை அதிமுக தலைமை முடிவு செய்யும்: கடம்பூர் ராஜு
சசிகலா விடுதலைக்குப் பிறகு அவரை அதிமுகவில் இணைப்பது பற்றி கட்சிக்குள்ளே பல தரப்பட்ட கருத்து நிலவி வந்தது. முதல்வர் ஈ.பி.எஸ் சசிகலா இணைப்பை தொடர்ந்து எதிர்த்து வந்த நிலையில் ஓ.பி.எஸ் சசிகலா விவகாரத்தில் அமைதியே காத்து வந்தார். ஒரு சில அமைச்சர்கள் மாறுபட்ட கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிமுக அமைச்சர்கள் சசிகலாவிற்கு ஆதரவாக கருத்தை தெரிவித்து வருகின்றனர். கோவில்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கடம்பூர் ராஜு, “மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா மீது யாரும் குற்றம் சொல்லவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து யார் மீதும், யாரும் வீண் பழி சுமத்தவில்லை.
ஜெயலலிதா மரணத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதற்காகத்தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது, அவரது மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை” என்று பேசினார்.
சசிகலாவை இணைப்பு பற்றி பேசுகையில், ”அதிமுகவில் அவரை இணைப்பது குறித்து, ஒருங்கிணைப்பாளரும், இணை ஒங்கிணைப்பாளரும்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே துணை முதல்வர் ஓ.பி.எஸ் சசிகலா இணைப்பை பரிசீலித்து பார்க்கலாம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.