உபரிநீர் திறப்பால் நீரில் மூழ்கிய 4 தரைப்பாலங்கள் - தவிக்கும் மக்கள்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள வெலிங்டன் நீர்தேக்கத்திலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் நான்கு தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளன.
தொடர்மழை காரணமாக, கீழ்ச்செருவாய் கிராமத்திலுள்ள வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து 1,737 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், திட்டக்குடி அருகேயுள்ள நான்கு தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
நாவலூர், புலிவளம், சாத்தநத்தம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், 25 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கிராமம் முழுவதும் தண்ணீர் தேங்கி, தீவு போல காட்சியளிக்கிறது. இந்தப் பகுதியில் மேம்பாலம் கட்டித் தரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.