பாரத் என மாறும் இந்தியா; அன்றே கணித்தார் கபிலன் வைரமுத்து - வைரலாகும் பதிவு!
எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே காண்பேன் என்று நினைக்கவில்லை என கபிலன் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
இந்தியா பெயர் மாற்ற சர்ச்சை
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது. ஜி20 அமைப்பின் 20 உறுப்பு நாடுகள் உட்பட 40 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ள தலைவர்களுக்கு இரவுவிருந்து வழங்குவதற்காக குடியரசுத் தலைவர் சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கமாக ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்று இருப்பதற்கு பதிலாக, இந்த அழைப்பிதழில் ‘பாரத் குடியரசுத் தலைவர்’ (President Of Bharat) என இடம்பெற்றுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற இருப்பதாகவும் அதற்காக வரும் செப்டம்பர் 18ஆம் தேதி சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளும், அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் கண்டனமும், கருத்துகளும் தெரிவித்து வருகின்றனர்.
கபிலன் வைரமுத்து
இந்நிலையில் இது தொடர்பாக கபிலன் வைரமுத்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் "2030களில் இருந்து கால ரயிலில் ஏறி பின்னோக்கிச் செல்லும் இந்தியன் 1920களின் சிறுவனிடம் பேசும்போது இந்தியாவின் பெயர் இப்படி மாறியிருக்கலாம் என்று நினைத்து எழுதினேன்.
அந்த எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே காண்பேன் என்று நினைக்கவில்லை" என்று பதிவிட்டுள்ளார். கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் என்ற புத்தகத்தில் வரும் உரையாடலில் நீங்கள் எந்த ஊரு என்று ஒருவர் கேட்கும் போது ’பாரத்’ என்று இன்னொருவர் பதில் அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அன்றே கணித்தார் கபிலன் வைரமுத்து என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.