“மாஸ்டர் படத்தில் நடந்த மிகப்பெரிய தவறு’ - இயக்குநரை விமர்சித்த தயாரிப்பாளர்
விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு விஷயம் தவறாக காட்டப்பட்டுவிட்டதாக பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் விமர்சித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்து அனிருத் இசையமைப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான இப்படம் வசூலில் மாபெரும் சாதனைப் படைத்தது.
இதனிடையே தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.ராஜன் பல்வேறு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். திரையுலகைச் சேர்ந்தவர்களை வெளிப்படையாக விமர்ச்சித்து அவ்வப்போது கருத்துகளை தெரிவிப்பது வழக்கம்.
அந்த வகையில் மாஸ்டர் படத்தின் வாயிலாக இயக்குநர் லோகேஷ் கனகராஜையும் அவர் சீண்டியுள்ளார். இதுதொடர்பான பேட்டியில் பேசியுள்ள கே ராஜன் கைதி படத்தின் இயக்குநர் நல்ல அருமையாக திட்டமிடலுடன் படங்களை கையாள்கிறார் என்று முதலில் பாராட்டிள்ளார்.
ஆனால் அவர் இயக்கிய மாஸ்டர் படத்தில் தனக்கு பிடிக்காத ஒரே விஷயம் ஒரு கல்லூரி ஆசிரியராக இருக்கும் விஜய் குடித்து விட்டு வருவது போன்ற காட்சிகள் தான் என்றார். மாணவர்களுக்கு எல்லாம் பிடித்த ஆசிரியர் மாணவர்களுக்கு நல்வழியை கற்பிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தான் 18ஆண்டுகள் வரை தான் ஒரு ஆசிரியராக பணியாற்றியவன் என்ற வகையில் இந்த கருத்தை தெரிவித்ததாக கே.ராஜன் தெரிவித்துள்ளார்.