கூட்டணி இல்லாமல் திமுக ஜெயிக்க முடியாது - மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன்
கூட்டணி இல்லாமல் திமுக அதிமுக வெற்றி பெற முடியாது என கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.
பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட மாநாடு இன்று நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு இலவசம் வழங்கக்கூடாது என, பாஜக தெரிவித்தது.
மகாராஷ்டிரா தேர்தல்
ஆனால் மகாராஷ்டிராவில் மாதந்தோறும் மகளிருக்கு உரிமை தொகை கொடுக்க உள்ளோம் என தெரிவிக்கின்றனர். பாஜகவிற்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கொள்கை உள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் நாளன்று மத்திய அரசு தேர்வை அறிவிக்கிறது. வேண்டுமென்றே பொங்கல் தினத்தில் தேர்வை அறிவித்து மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் விரோத அணுகு முறையாகவே இதை நாங்கள் பார்க்கிறோம்" என பேசினார்.
திமுக கூட்டணி
'திமுக கூட்டணியில்தான் பங்கு உண்டு. ஆட்சியில் எப்போதும் பங்கு இல்லை' என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, "எங்களைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பதை வேற மாதிரி வைத்திருக்கிறோம்.
அமைச்சர் பதவி வாங்குவது மட்டும் அதிகார பகிர்வு கிடையாது. கொள்கை ரீதியான திட்டத்தை உருவாக்கி அந்தத் திட்டத்தின் அடிப்படையில் கூட்டணியில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வரும்போது அந்த திட்டத்தை செயல்படுத்துகிற கூட்டணி அமைய வேண்டும். அதைத்தான் எதிர்பார்க்கிறோம்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக எவ்வளவு பெரிய கட்சிகளாக இருந்தாலும், தேர்தலில் கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது இயலாத காரியம்" என பதிலளித்துள்ளார்.
ஆட்சி அதிகார பங்கு
விஜய் தமிழக வெற்றி கழக மாநாட்டில் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி காட்சிகளுக்கு பங்கு வழங்கப்படும் என பேசிய பின் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறது.
தவெக மாநாட்டிற்கு மறுநாளே காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கு வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். தற்போது திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியும் இவ்வாறு பேசி வருவது திமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது