பேரறிவாளன் விடுதலையை பாஜக ஏற்றுக்கொள்கிறது - அண்ணாமலை டுவிட்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து தற்போது பிணையில் இருந்த பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தார்.
அதன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநில அமைச்சரவை தனக்குரிய சட்ட அதிகார பிரிவின் கீழ் முடிவெடுத்து ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பும் விஷயம் மீது ஆளுநர் அதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை செலுத்த முடியாது.
மேலும், இந்த விவகாரத்தில் ஒரு நபரை விடுவிக்கவோ அல்லது விடுவிக்க மறுக்கவோ தனிப்பட்ட முறையில் அவர் முடிவெடுக்க முடியாது. மாநில அமைச்சரவையின் முடிவிற்கு அவர் முழுமையாக கட்டுப்பட்டவர் என்று உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தனர்.
இதனையடுத்து, சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவத்து வரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த வாரம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு தீர்பளித்து உத்தரவிட்டனர்.
மேலும், ஆளுநர் 161வது பிரிவில் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால் 142 சட்டப்பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்வதாக உத்தரவிட்டனர்.
இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை @BJP4TamilNadu ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்! என்று பதிவிட்டுள்ளார்.