வரலாற்றை மாற்றிய கட்சி .. சீர்திருத்தங்களின் முன்னோடி : நீதிகட்சி வரலாறு
தமிழ்நாடு முடியாட்சி காலத்திலேயே ஜனநாயகத்தின் மீதான பார்வை தமிழகத்திற்கு இருந்துள்ளது. சோழ மன்னர்கள் ஆட்சியில் இருந்த போதே குடவோலை முறை என்பது இன்றைய தேர்தல் முறைகளுக்கு ஒரு முன் னோடியாக இருந்திருப்பதை கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது.
ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற அரசவை நிறுவனங்கள் மன்னராட்சியினை கேள்விகேட்பவையாகவும் , மக்களின் குரலாகவும் இருந்துள்ளன. கொஞ்சம் காலங்கங்கள் கடந்தது மன்னராட்சியில் குறிபிட்ட சமுதாய மக்களே உயர் பதவியில் இருந்தனர், பிறகு காலங்கள் மாற முகலாயர்கள் , போர்ச்சுகீசியர்கள், டச்சுகாரர்கள் என பலர் இந்தியாவுக்கு ஆட்சிய நிறுவ முயன்றனர், அதில் கிழக்கிந்திய கம்பெனிதான் இந்தியாவை ஆட்டி படைத்தது, பல கோடி மக்கள் உள்ள இந்த ஒட்டுமொத்த இந்துஸ்தானையும் ( பாரத தேசத்தையும்) சில லடசம் உள்ள வெள்ளையர்கள் சூழ்ச்சியால் ஆண்டனர்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தி மொத்த மக்கள் தொகையில் பிராமணர் அல்லாதோர் சதவீதத்தை விட அதிக அளவில் அரசு பணியில் பிராமணர்கள் இடம்பெற்றிருந்தனர். உரிமையை மீட்டெடுக்க பிராமணரல்லாதோர் சங்கம் உருவாக்கப்பட்டு பின்னாளில் நீதி கட்சியாக உருபெற்றது.இன்றைய தமிழக அரசியல் கட்சிகளின் உரிமைக்கு குரல் கொடுக்கும் கட்சியாக தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுத்த முதல் அக்கினித் தனல் நீதிகட்சி என்பது தான் மறுக்க முடியாத உண்மை
நீதிக் கட்சி வரலாறு
மாண்டேகு கெம்ஸ்போர்டின் அரசியல் சீர்திருத்தங்களின் விளைவாக 1919 இந்திய அரசு சட்டம் இயற்றப்பட்டு மெட்ராஸ் மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்தவகையில் 1920 ஆம் ஆண்டு நீதிக்கட்சி தேர்தலில் போட்டியிட்டது. 1937 வரை மெட்ராஸ் மாகாணத்தில் நீதிக்கட்சியின் ஆட்சி தான் இருந்தது. 1937 இல் காங்கிரஸ் கட்சியிடம் தோல்வியைத் தழுவியது நீதிக்கட்சி.
ஒருபக்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மற்றொரு பக்கம் அரசாங்கம் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் என இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியது ஆங்கிலேய அரசு. அப்படி தேர்தலில் பங்கெடுத்த வேட்பாளர்களை, வெற்றி பெற்றவர்களை 1920 டிசம்பர் 6ஆம் தேதி அறிவித்தது. தராசு சின்னத்தில் போட்டியிட்ட நீதிக்கட்சி 63 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது.
முதலில் தோல்வி
ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதல் அமைச்சராக பொறுப்பேற்றார். பனகல் அரசர் உள்ளாட்சித்துறை பொறுப்புகளை வகித்தார். 1920இல் நீதிக்கட்சி வெற்றி பெற்றபோது சர் பி.டி தியாகராயர் முதலமைச்சர் பொறுப்பேற்க கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். அதன்பிறகுதான் சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராக பொறுப்பேற்றார். சில மாதங்களுக்குப் பிறகு சுப்புராயலு காலமானார். அவருக்கு பதிலாக பனகல் அரசர் முதலமைச்சராக பொறுப்பேற்றார். நீதிக் கட்சியின் அமைச்சரவை 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் சட்டமன்றத்தின் காலம் முடிவுற்றதால் கலைக்கப்பட்டது.
1923 அக்டோபர் 31 ஆம் நாள் சென்னை மாநில சட்ட மன்றத்துக்கு இரண்டாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் பல்வேறு காரணங்களினால் நீதிக்கட்சி வலுவிழந்தது. ஆயினும், சட்ட மன்றத்தில் கூடுதலாக 17 பேர் நீதிக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1923 ஆம் ஆண்டு நவம்பர் 19-ல் இரண்டாவது நீதிக்கட்சி அமைச் சரவை பனகல் அரசர் தலைமையில் அமைந்தது. ஏ.பி.பாத்ரோ, டி.என்.சிவஞானம் பிள்ளை ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
அப்துல்லா கட்டாலா சாகிப் பகதூர், எஸ்.அற்புத சுவாமி உடையார், டி.சி. தங்கவேல் பிள்ளை ஆகியோர் அமைச்சரவை செயலாளராயினர். டாக்டர் சி.நடேச முதலியார், ஓ. தணிகாசலம் செட்டி ஆகிய திராவிட இயக்க முன்னோடித் தலைவர்கள் அதிருப்தியுற்று எதிர்முகாம் சென்றனர். இந்தக் கசப்புணர்வு நம்பிக்கையில்லாதத் தீர்மானம் வரை சென்றது. அதுவும் தோற்கடிக்கப்பட்டது. பி. தியாகராய செட்டி 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் நாள் மறைந்தார். அவரது மறைவுக்குப் பின் பனகல் அரசர் கட்சிப் பொறுப்பேற்றுக் கட்சிக்குப் புத்துயிர் ஊட்ட முயன்றார். 1926 ஆம் ஆண்டு நவம்பர் 8-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 98 இடங்களில் 41 இடங்கள் பெற்றது.
அது தனிப் பெருங்கட்சியாக விளங்கியது நீதிக்கட்சியினர் 21 இடங்களையே பெற்றனர். இந்திய தேசிய காங்கிரஸ் அமைச்சரவை அமைப்பதில்லை என முடிவெடுத்தது. ஆளுநராயிருந்த கோஷ்சன் சுயேச்சை அமைச்சரவை அமைக்க டாக்டர் சுப்பராயனுக்கு அழைப்பு விடுத்தார். காங்கிரசின் உதவியுடன் சுயேச்சை அமைச்சரவை பதவியேற்றது. நீதிக் கட்சியினர் எதிர் வரிசையில் இருந்தனர்.
சைமன் குழு வருகையை ஆதரித்ததன் விளைவால் சுப்பராயன் அமைச்சரவைக்கு ஆபத்து ஏற்பட்டது. வேல்சு இளவரசர் வருகையை எதிர்த்த காங்கிரஸ், தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. நீதிக் கட்சியினர் சுப்பராயனின் உதவிக்கு வந்தனர். இந்த அமைச்சரவையில் அமைச்சராக இருந்த முத்தையா முதலியார்தான் வகுப்புரிமை ஆணை என்பதை வெளியிட்டுச் சமூக நீதியை நிலைநாட்டினார்.
குழப்பத்தில் நீதிகட்சி
நீதிக்கட்சியினர் தங்களது செல்வாக்கை வலுப்படுத்திக் கொண்ட நிலையில் தங்களது தலைவர் பனகல் அரசரை 1928 டிசம்பர் 16 ஆம் நாள் இழந்தனர். நான்காவது பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்ற போது பி. முனுசாமி நாயுடு தலைமையில் நீதிக் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார்.
1930 அக்டோபர் 27-ல் பி.டி.இராசன் (பொன்னம்பலம் தியாக ராசன்) டி.குமாரசாமி ஆகியோர் அமைச்சர்களாகப் பங்கேற்றனர். நீதிக் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அவர்களுடைய தீர்க்கமான இலட்சியங்களை அடைவதைக் கடினமாக்கின. முனுசாமி நாயுடு பதவி விலகினார்.
1932 நவம்பர் 5-ல் ஸ்ரீ தவி வாரு ஸ்ரீ ராமகிருஷ்ண ஸ்வாசாலப்பதி ரெங்காராவ் அவருக்குப் பின் பதவி யேற்றார். அவர் தான் பொப்பிலி அரசர் என அழைக்கப் பெற்றார்.
காங்கிரசிடம் தோல்வி
சுமார் மூன்றரை ஆண்டுக் காலம் முதன்மை அமைச்சராகப் பதவியிலிருந்தார். உடல்நலக் குறைவின் காரணமாக அவர் பதவி விலகிட நேர்ந்த போது 4.4.1936 முதல் 24.8.1936 வரை பி.டி.இராஜன் முதன்மை அமைச்சரானார். மீண்டும் பொப்பிலி அரசர் 25.8.1936 முதல் 31.3.1937 வரை முதன்மை அமைச்சராய் இருந்தார். 1936 இல் அவரது ஆட்சிக்காலம் முடிந்தாலும் புதிய இந்திய அரசியல் சட்டம் அறிமுகப் படுத்தப்பட்டதால் புதிய ஆட்சியினர் பதவிக்கு வரும் வரை ஆட்சி நீடித்தது. 1935 ஆம் ஆண்டு சட்டத்தின்படி முதன் முதலில் பொதுத் தேர்தல் நான்கு நாட்கள் நடைபெற்றது. 215 இடங்களில் 159 இடங்கள் காங்கிரசுக்கும் 21 இடங்கள் மட்டும் நீதிக் கட்சியினருக்கும் கிடைத்தன. நீதிக் கட்சியின் தோல்வி இது.
தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற காங்கிரஸ் 1935 ஆம் ஆண்டு இந்தியச் சட்டப்படி ஆளுநரிடம் உள்ள கூடுதல் அதிகாரம் குறித்துக் கோரிக்கை வைத்தது. ஆளுநரின் உறுதிமொழி பெற்ற பின்னரே ஆட்சி அமைப்போம் என காங்கிரஸ் கூறியதால் பதவியேற்கத் தாமதமாயிற்று. அதனால் ஆளுநர் நீதிக் கட்சியைச் சேர்ந்த கே.வி.ரெட்டி நாயுடுவை அமைச்சரவை அமைக்க வேண்டிக் கொண்டார்.
1937 ஏப்ரல் 2 ஆம் நாள் முதல் காங்கிரசின் சார்பில் இராஜாஜி முதன்மை அமைச்சராய் பதவியேற்று 1937 ஜூலை 14 வரை ஆட்சியிலிருந்தார். 1926 முதல் 1929 வரை உள்ள இடைப்பட்ட சுப்பராயனின் ஆட்சிக் காலந்தவிர 1920 முதல் 1937 வரை சென்னை மாநிலத்தை நீதிக் கட்சியினர் ஆட்சி செய்தனர். நீதிக்கட்சி ஆட்சியின் பல நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கன. பொதுப் பணியில் பார்ப்பனரல்லாத வகுப்பினருக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கும் முயற்சியினை நீதிக் கட்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. தாழ்த்தப்பட்ட இனத்தினரின் நிலையை மேம்படச் செய்தல், கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்தன
நீதிக்கட்சியின் ஆட்சிக்கு முன்பு வரை கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தது. செயல் முறைகளை மாற்றி அனைவருக்கும் கல்வி, அனைத்து ஜாதியினரும் பள்ளிக்கூடம் சென்று பயிலலாம் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது நீதிக்கட்சி ஆட்சியில். பிறகு பள்ளிக்கூடங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் அனைத்து மக்களாலும் செலுத்த முடியுமா என்று தீர்மானித்த பிறகு கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. இருப்பினும் ஆதிதிராவிடர் பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு வரும் போது மற்ற சாதியினரால் இன்னல்களுக்கு ஆளாக்க படுவார்களா என்று சிந்தித்தது நீதிக்கட்சி. ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எளிதில் வந்து செல்லும் இடங்களில் பள்ளிக் கூடங்கள் அமைக்கப்பட்டன.
இந்தியாவில் வட மாநிலங்களில் தற்போது வரை அனைத்து சாதியினருக்கும் சமமான கல்வி என்பது இல்லை. ஆனால் 1923ஆம் ஆண்டே தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. 1921 முதல் 1928 வரை 19,095 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதன் மூலம் நீதிக்கட்சி கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்து இருந்தது என்பது தெளிவாக தெரிகிறது. சிறப்பான தீர்மானங்கள் தமிழகத்தில் இன்று வரை கல்லூரிகளில் வழங்கப்படும் உதவித் தொகைகளை அறிமுகம் செய்தது நீதிக்கட்சி தான்.
முன்னோடி நீதி கட்சி
1925 முன்புவரை சமஸ்கிருதத்தை படிக்காமல் பட்டம் பெற முடியாத நிலை இருந்தது. ஆனால் நீதிக்கட்சியின் போராட்டங்களுக்கு பிறகு தமிழில் படித்துப் பட்டம் பெறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது. சீர்திருத்தங்களின் முன்னோடி தமிழகத்தில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து ஏழைப் பிள்ளைகளின் பசியை ஆற்றியது காமராசர். ஆனால் நீதிக்கட்சியின் ஆட்சியிலேயே இத்திட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது என்பதே உண்மை.
தியாகராய செட்டியாரின் கடும் உழைப்பின் பயனாக ஆதிதிராவிடர் பிள்ளைகள் படிப்பை பாதியில் நிறுத்தி விடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் அவர்களுக்கு மதிய உணவை இலவசமாக வழங்கியது அன்றைய நீதிக்கட்சி. ஆதிதிராவிடர்கள் பொது இடத்தில் நடமாடி தாக்கப்பட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை சென்னை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார் இரட்டைமலை சீனிவாசன்.
தற்போது பெண்களுக்கு சமூகத்தில் சம நிலை, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, வாக்களிக்கும் உரிமை திட்டங்கள் வருவதற்கு முன்னோடியாக இருந்தவர்கள் நீதிக் கட்சிக்காரர்கள்.