நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம் - தமிழ்நாட்டில் என்னவெல்லாம் இயங்கும்? இயங்காது?
நாடு தழுவிய வேலை நிறுத்தம்
இந்திய அரசு, தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிப்பதாகவும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள தொழிற்சங்கங்கள், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(09.07.2025) நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த போராட்டத்தில், வங்கிகள், அஞ்சல் துறை, காப்பீட்டுத் துறை மற்றும் பல மாநில போக்குவரத்து அமைப்புகள் கலந்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு தமிழத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொழிற்சங்க அமைப்புகள் உட்பட 13 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், தமிழ்நாட்டில் பாதிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் என்ன இயங்கும்?
அதேவேளையில், பேருந்துகள் வழக்கம் போல இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காததால், வழக்கம் போல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஐடியூ உள்ளிட்ட அமைப்பினர் ஆட்டோக்களை இயக்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தலைமை செயலாளர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.
வங்கிகள் விடுமுறை அளிக்கவிட்டாலும், வங்கி ஊழியர் அமைப்புகள் கலந்து கொள்வதால் வங்கி மற்றும் தபால் சேவைகள்பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டால் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படலாம்.
மருத்துவமனை, பள்ளி கூடங்கள், கடைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.