ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு
தமிழக கேரள எல்லையில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
கோவை எல்லை பகுதியான வாளையாற்றில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் யானைகள் உயிரிழப்பது குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ் குமார் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வரும் நிலையில், கோவைக்கு உயர்நீதிமன்றத்தை சேர்ந்த மூன்று நீதிபதிகள் நேரில் சென்றனர்.
கோவை, பாலக்காடு ரயில் சாலை பகுதிக்கு சென்ற நீதிபதிகள் சுப்பிரமனியன், சதீஷ் குமார் மற்றும் இளந்திரையன் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
மேலும், கேரளாவின் புறநகர் பகுதியில் உள்ள எட்டிமடை மற்றும் வாளையார் இடையே உள்ள தண்டவாளங்களையும் நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
யானைகள் ரயில்களால் மோதி வீசப்படும் இடங்கள், எச்சரிக்கை ஒலி எழுப்பும் தேனீ அலாரம் அமைப்பு, ரயில்வேயால் முன்மொழியப்பட்ட சோலார் வேலிகள் மற்றும் யானைகள் கடப்பதற்கு தண்டவாளத்தின் குறுக்கே இருக்கும் சரிவுகள் ஆகியவற்றை மூன்று நீதிபதிகளும் ஆய்வு செய்தனர்.
பின்னர், தமிழக முதன்மை வனக்காவலர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய நீதிபதிகள் யானைகள் உயிரிழப்பதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர்.
கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் இந்த வழித்தடத்தில் இதுவரை 24 யானைகள் உயிரிழந்திருப்பதும், கடந்த 14 ஆண்டுகளில் 11 யானைகள் ரயில் மோதி உயிரிழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.