நூற்றாண்டு காலமாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை - நீதிபதிகள் சரமாரி கேள்வி
திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில், மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தை ஏற்றும் முழு உரிமை கோவில் நிர்வாகத்திற்குத்தான் உள்ளது. எந்தத் தனிநபரும் அதற்கு உரிமை கோர முடியாது.
பல ஆண்டு காலமாக மலை மீது உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மலை மீது தீபமேற்றுவதும் ஆகம விதிகள் சம்பந்தப்பட்டது. இதில் தனி நபர் உரிமையாக கோர முடியாது.
இந்த விவகாரத்தில் அறநிலையத் துறை மற்றும் கோவில் தரப்பு வாதங்களை தனி நீதிபதி ஏற்கவில்லை. தமிழ்நாடு தொல்லியல் ஆய்வுத் துறை வெளியிட்ட நூலின் படி, உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ளது மட்டுமே தீபத் தூண்.
இதைத் தவிர மலையில் உள்ள பிற தூண்கள் தீபத் தூண்கள் அல்ல. தற்போது தீபம் ஏற்றப்பட்டுவரும் தூணில் காலம் காலமாக தீபம் ஏற்றப்பட்டதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. ஆனால் மனுதாரர் குறிப்பிடும் தூணில் தீபம் ஏற்றப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என வாதிட்டார்.
தனி நீதிபதியின் கற்பனை
அதைத்தொடர்ந்து தர்கா சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், "திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்தில் இதற்கு முன் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விளக்கம் தருவதற்கு எங்களுக்கு போதுமான அவகாசம் தரப்படவில்லை. தர்காவிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் எங்கு வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம் என்பதை ஏற்க முடியாது" என கூறினார்.
இந்த வழக்கில் காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூண் என்பது தனி நீதிபதியின் கற்பனை. உறுதியாக தெரியாத நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்" என்ற வாதத்தை முன்வைத்தனர்.
இதனையடுத்து மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், "மலை முழுவதும் கோயிலுக்கே சொந்தம், கோயில் சொத்தில்தான் தூண் உள்ளது. மலை உச்சியில் தீபம் ஏற்றுவது நம் கலாச்சாரம் தொடர்புடையது.
கோயில் - தர்கா தரப்பு பேச்சுவார்த்தை
இதனிடையே குறுக்கிட நீதிபதிகள், "1994 தீர்ப்பில் மேலே உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் எனக் கூறவில்லை. மாற்று இடத்தில் ஏற்றலாம் என பரிசீலனை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டு காலமாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லையே?" என கேள்வி எழுப்பினர்.
மேலும், கோயில் - தர்கா தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடலாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, "பேச்சுவார்த்தை விவகாரத்தில் தீர்வு கிடைப்பதை தாமதப்படுத்தும்" என மனுதாரர் தரப்பு பதில் அளித்தனர். "மார்கழி பிறந்துவிட்டது. அடுத்த கார்த்திகைக்கு இன்னும் 360க்கும் மேலான நாட்கள் உள்ளன" என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.