டிடிஎஃப் வாசனின் 'யூடியூப் சேனலை மூடிவிடலாம், பைக்கை எரித்து விடலாம்’ - நீதிபதி காட்டம்!
டிடிஎஃப் வாசனின் 'யூடியூப் சேனலை மூடிவிடலாம், பைக்கை எரித்து விடலாம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
டி.டி.எப். வாசன்
கடந்த 17ம் தேதி பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக் வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்.
இதனையடுத்து பாலுசெட்டிசத்திரம் போலீஸார், அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் புழல் சிறையில் 15 நாள் அடைக்கப்பட்ட வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் , டிடிஎஃப் வாசன் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “சாலையில் மிதமான வேகத்தில் வந்துகொண்டிருந்தபோது, கால்நடைகள் சாலையை கடந்தன. இதனால் திடீரென பிரேக் போட்டதால், வாகனத்தின் சக்கரம் தூக்கியது. பிரேக் போடாமல் இருந்தால் கால்நடைகள் மற்றும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்” எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், “விபத்தில் காயமடைந்துள்ளதால், சிறையில் உரிய சிகிச்சை பெற முடியவில்லை. புண்கள் மோசமாகி வருவதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது.
நீதிபதி உத்தரவு
ஆகவே ஜாமீன் வழங்க வேண்டும்” என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தான் அப்பாவி என்றும், எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார் டிடிஎப் வாசன்.
இந்த மனுவானது இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறையினர் சார்பில் "20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் வைத்துள்ளார். 3 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு உடை அணிந்ததால் உயிர்தப்பியிருக்கிறார். இவரது யூடியூப் சேனலை பின்தொடரும் 45 லட்சம் பேர் சிறார்கள். அவர்கள் இவரைப்பார்த்து அதி வேகமாக வாகனம் ஓட்டுவதும், பலர் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபடுவதும் நடக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவ காரணங்களைக் கூறி ஜாமீன் கேட்ட டிடிஎஃப் வாசனின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி கார்த்திகேயன் அவருக்கு மருத்துவ சிகிச்சையை சிறையிலேயே வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், “விளம்பரத்திற்காகவும் மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்ட மனுதாரரின் வழக்கு மற்ற இளைஞர்களுக்கு பாடமாக அமைய வேண்டும். எனவே அவர் நீதிமன்ற காவலில் நீட்டிக்க வேண்டும். அவரது யூட்யூப் பக்கத்தை மூடிவிட்டு பைக்கை எரித்துவிட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடவும்” என தெரிவித்துள்ளார் நீதிபதி. மேலும் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.