நீதிபதி கலையரசன் விசாரணை அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க ஐகோர்ட் உத்தரவு
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா தனது பணி காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முந்தைய அதிமுக அரசு ஆட்சிக்காலத்தில் சூரப்பாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இந்த ஆணையம் சூரப்பாக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரித்து அதற்கான அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்த சூழலில் ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் கலையரசன் ஆணையத்தை எதிர்த்து, சூரப்பா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில் , அண்ணா பல்கலை. துணை வேந்தராக இருந்தபோது, பேராசிரியர் பணி நியமனங்களில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் நீதிபதி கலையரசன் குழுவின் விசாரணை அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேந்தராகிய ஆளுநருக்கு அனுப்பும் முன் அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி பார்த்திபன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.