முதலமைச்சர் நிகழ்ச்சிக்காக நீதிபதியை ரோட்ல நிறுத்துவீங்களா ? - கொந்தளித்த ஹைகோர்ட் நீதிபதி

traffic judge mkstalin anandvenkatesh
By Irumporai Oct 02, 2021 07:36 AM GMT
Report

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக சாலையில் நீதிபதி தடுத்து நிறுத்தி காக்க வைத்த சம்பவத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை கடுமையாக எச்சரித்துள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை அடையாறு சாலையில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ,முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ள சாலைகளின் இரு பக்கமும் தடுப்புகளை அமைத்து சாலைகளில் போக்குவரத்து நிறுத்தி வைத்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்போது, அந்த சாலை வழியாக உயர்நீதிமன்றம் வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வாகனத்தையும் காவல்துறையினர் தடுத்துள்ளனர். இதனால் நீதிபதி சுமார் 25 நிமிடங்கள் தாமதமாக உயர்நீதிமன்றத்திற்கு சென்றார்.

மேலும், போக்குவரத்தை தடை செய்தால் பணி பாதிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, காணொலி காட்சி மூலம் ஆஜரான உள்துறை செயலாளர் பிரபாகரிடம், எதற்காக 25 நிமிடங்கள் தடுத்து நிறுத்தினீர்கள்..? பொது ஊழியரான என்னை பணி செய்ய விடாமல் தடுத்தது நீதிமன்ற அவமதிப்பாகாதா.? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

நடந்த இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததாகக் கூறிய செயலாளர், எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வு நடைபெறாது என உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.